LATEST NEWS
“அய்யோ கொஞ்சம் பிசகியிருந்தாலும் அவ்வளவுதான்..!ஓடும் புனே எக்ஸ்பிரஸில் ஏற முயன்று தண்டவாளத்தில் விழுந்த நபர்.. கடவுள் போல வந்த பாயிண்ட்ஸ்மேன்…” நெஞ்சை பதற வைக்கும் சிசிடிவி காட்சி..!!
மத்திய ரயில்வேயின் மும்பை கோட்டத்தைச் சேர்ந்த கர்ஜத் ரயில் நிலையத்தின் 1-வது நடைமேடையில், நகர்ந்து கொண்டிருந்த எண்: 12123 CSMT-புனே எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணிகள் பெட்டி C-1-இல் ஏற முயன்ற பயணி ஒருவர், எதிர்பாராதவிதமாகத் தனது கட்டுப்பாட்டை இழந்து தண்டவாளத்திற்கும் நடைமேடைக்கும் இடையிலான இடைவெளியில் தவறி விழுந்தார். இந்த ஆபத்தான விபத்து அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.
ரயிலுக்கு கூடுதல் என்ஜினை இணைக்கும் பணியை முடித்துவிட்டுத் திரும்பிக் கொண்டிருந்த சௌரப் குமார் சிங் என்ற ரயில்வே ‘பாயிண்ட்ஸ்மேன்’, பயணி தண்டவாளத்தில் விழுவதை உடனடியாகக் கவனித்தார். தாமதிக்காமல் உடனடியாகச் செயல்பட்ட அவர், ரயிலின் மேனேஜருக்கு சிகப்பு எச்சரிக்கை சிக்னலைக் காட்டினார். அதைப் பார்த்த ரயில் மேனேஜர் உடனே அவசர கால பிரேக்கைப் பயன்படுத்தி ரயிலை நிறுத்தினார்.
இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ரயில்வே பாதுகாப்புப் படை அதிகாரி, ரயில்வே ஊழியர்கள் மற்றும் சக பயணிகள் இணைந்து தண்டவாளத்தில் சிக்கியிருந்த நபரைப் பத்திரமாக மீட்டு நடைமேடைக்கு இழுத்தனர். அதிர்ஷ்டவசமாக அப்பயணி பெரிய காயங்கள் எதுவுமின்றி உயிர்தப்பினார். இச்சம்பவத்தைத் தொடர்ந்து, ஓடும் ரயிலில் ஏறுவதையோ அல்லது இறங்குவதையோ முற்றிலும் தவிர்க்குமாறு மத்திய ரயில்வே நிர்வாகம் பயணிகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.
