LATEST NEWS
“வாவ்.. எனக்கு ரொம்ப பெருமையா இருக்கு…” லண்டனில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்தை பங்கமாக கலாய்த்த NRI பெண்… இணையத்தை புயலாய் தாக்கும் வீடியோ..!!
‘டெம்ஸ் நதியையும் சுத்தப்படுத்தி விடுவோம்…’ லண்டனில் விநாயகர் சிலை கரைப்பு குறித்து என்.ஆர்.ஐ பெண் ஒருவர் விமர்சித்து வெளியிட்டுள்ள வீடியோ சமூக வலைதளங்களில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. லண்டனின் புகழ்பெற்ற டெம்ஸ் நதிக்கரையில் விநாயகர் சிலையை நீர்நிலைகளில் கரைப்பது என்ற பெயரில் சுற்றுச்சூழலை மாசுபடுத்துபவர்கள் மீது கடுமையான விமர்சனத்தை முன்வைத்து நீலஞ்சனா ஹசாரிகா வர்மா என்ற என்.ஆர்.ஐ பெண் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அங்கு மிகவும் கடுமையான சட்டங்கள் அமலில் இருப்பதால், டெம்ஸ் நதியின் தூய்மையான பகுதிக்கு அருகே நீந்துவதற்கோ அல்லது பறவைகளுக்கு உணவளிப்பதற்கோ கூட அனுமதி இல்லை என்பதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அந்த வீடியோவில், “நாம் நமது கலாச்சாரத்தை மேம்படுத்த வேண்டும் அல்லவா? அதனால் விநாயகர் சிலையை டெம்ஸ் நதியில் கரைத்து விடுவோம், டெம்ஸ் நதியையும் சுத்தப்படுத்திவிட்டு நமது பொறுப்பிலிருந்தும் விடுபடுவோம்… வாவ்! எனக்கு மிகவும் பெருமையாக இருக்கிறது” என்று கிண்டலாகக் கூறியுள்ளார். இந்த வீடியோ வெளியானவுடன் சமூக வலைதளங்களில் பயனர்கள் இடையே இருவேறு கருத்துக்கள் எழுந்துள்ளன. உள்ளூர் சட்டங்களையும் சுற்றுச்சூழலையும் மதிக்காமல் செய்யப்படும் பக்திக்கு எந்தப் அர்த்தமும் இல்லை என்றும், இயற்கையின் மீதான பொறுப்பு உணர்வு இல்லாமல் செய்யப்படும் பக்தி அதன் நோக்கத்தையே வீணடித்துவிடும் என்றும் பலர் அவருக்கு ஆதரவு தெரிவித்து கருத்து பதிவிட்டு வருகின்றனர்.
இந்த விவாதம் தீவிரமடைந்ததையடுத்து, நீலஞ்சனா தனது பதிவின் தலைப்பில் யாருடைய உணர்வுகளையும் புண்படுத்துவதோ அல்லது பாரம்பரியத்தைத் தவறாகச் சித்தரிப்பதோ தனது நோக்கமல்ல என்று தெளிவுபடுத்தியுள்ளார். “நமது பாரம்பரியங்கள் மிகவும் அழகானவை; ஆனால், அந்நிய மண்ணில் அந்நாட்டுச் சட்டங்களுக்கும் சுற்றுச்சூழலுக்கும் மதிப்பளிப்பது மிகவும் முக்கியம்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார். வெளிநாடுகளில் இந்தியப் பண்டிகைகள் சிறப்பாகக் கொண்டாடப்படுவது பெருமையளித்தாலும், சட்டங்களையும் சுற்றுச்சூழலையும் கருத்தில் கொள்ள வேண்டும் என்ற ரீதியில் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி தீவிர விவாதப் பொருளாக மாறியுள்ளது.
