LATEST NEWS
ஐயோ கொடுமையே..! விநாயகர் விசர்ஜனத்தில் நடந்த கொடூரம்.. உயர்மின்னழுத்த ஒயர் உரசி ஆடையில் பற்றி எரிந்த தீ… வைரலாகும் திக் திக் வீடியோ!
கர்நாடக மாநிலம் குடகு மாவட்டம் வீராஜ்பேட்டையில் வெள்ளிக்கிழமை இரவு விநாயகர் சிலை விசர்ஜனத்தை முன்னிட்டு, அலங்கரிக்கப்பட்ட சப்பரங்கள் மற்றும் டிஜே வாகனங்களுடன் கோலாகலமான ஊர்வலம் நடைபெற்றது. அப்பகுதியில் ஊர்வலம் சென்றுகொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாகச் சாலையில் சென்ற உயர் அழுத்த மின்சார ஒயர், டிஜே வாகனத்தின் மீது உரசியுள்ளது.
இதில் வாகனத்தில் பயணம் செய்தவர்கள் மீது சட்டென மின்சாரம் பாய்ந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதில் மின்சாரம் தாக்கியதில் ஒருவர் உடலில் ஆடைகள் தீப்பற்றி எரிந்த நிலையில், 5 பேர் சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்து பலத்த காயமடைந்தனர். மின்சாரம் பாய்ந்ததில் படுகாயமடைந்த ஹூப்ளி-தார்வாடைச் சேர்ந்த பசவராஜு உட்பட இருவர் ஆபத்தான நிலையில் மைசூரு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுத் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மற்ற 3 பேர் மடிகேரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இச்சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஆர்.என். பிந்துமணி சம்பவ இடத்திற்கு நேரில் வந்து ஆய்வு மேற்கொண்டார். மேலும், வீராஜ்பேட்டை தொகுதி எம்.எல்.ஏ ஏ.எஸ். பொன்னண்ணா உடனடியாக மருத்துவமனைக்குச் சென்று காயமடைந்தவர்களைச் சந்தித்து ஆறுதல் கூறியதுடன், அவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். கொண்டாட்டத்துடன் நடந்த ஊர்வலத்தில் நேர்ந்த இந்த மின்சார விபத்து அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
