LATEST NEWS
மருத்துவமனையா..? மரண பொரியா..? ஒரே வாரத்தில் 2-வது முறை விழுந்த கூரை..! கைக்குழந்தை காயமடைந்த சம்பவத்தால்… இணையத்தில் வெடிக்கும் கொந்தளிப்பு..!!
மத்திய பிரதேச மாநிலம் குவாலியரில் உள்ள கமலாராஜா அரசு மருத்துவமனையின் குழந்தைகள் வார்டில் செவ்வாய்க்கிழமை காலையில் எதிர்பாராத விபத்து ஒன்று ஏற்பட்டது. அங்குள்ள கூரையின் பிளாஸ்டர் காரை திடீரென பெயர்ந்து கீழே விழுந்ததில், கட்டிலில் தூங்கிக் கொண்டிருந்த ‘குஷி’ என்ற இரண்டரை மாத பெண் குழந்தையின் காலில் லேசான காயம் ஏற்பட்டது. இச்சம்பவம் குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவிய நிலையில், குழந்தை படுத்திருந்த கட்டிலிலும் தரையிலும் காரைத் துண்டுகள் சிதறிக் கிடப்பது தெரியவந்தது.
இச்சம்பவத்தைத் தொடர்ந்து, மருத்துவமனை ஊழியர்கள் உடனடியாகச் செயல்பட்டு அந்த வார்டைக் காலி செய்தனர். அங்கு சிகிச்சையில் இருந்த 16 குழந்தைகளும் உடனடியாகப் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டு, தீவிர கண்காணிப்பிற்காக குழந்தைகள் தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டனர். அங்கு அவர்களுக்குத் தேவையான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்ட பிறகு, அனைவரும் பாதுகாப்பான வேறொரு வார்டுக்கு மாற்றப்பட்டனர்.
தொடர்ந்து பெய்து வரும் மழையால் கட்டிடத்தில் ஏற்பட்ட நீர் கசிவு மற்றும் ஈரப்பதம் காரணமாகவே கூரையின் பிளாஸ்டர் பலவீனமடைந்து பெயர்ந்து விழுந்திருக்கலாம் என மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இதே வார்டில் ஒரு வாரத்திற்கு முன்பும் இது போன்ற பிளாஸ்டர் பெயர்ந்து விழும் சம்பவம் நடந்ததாகக் கூறப்படுகிறது. இந்தத் தொடர் சம்பவங்கள் அரசு மருத்துவமனை கட்டிடத்தின் பழுதான நிலை குறித்தும், அங்கு சிகிச்சைக்கு வரும் குழந்தைகளின் பாதுகாப்பு குறித்தும் பெரும் கவலையை உருவாக்கியுள்ளது.
