CRIME
என்ன கொடுமை இது… சிக்கன் ரேட் கேட்டது ஒரு குத்தமா..? ஆட்களைத் திரட்டி மாணவனை அடித்து கொன்ற கடை உரிமையாளர்… கறி வாங்கப் போன இடத்துல நடந்த கொடூரம்..!!
மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூரில் கறிக்கடையில் சிக்கன் விலையைக் குறித்து ஏற்பட்ட சிறு தகராறு கொடூரக் கொலையில் முடிந்துள்ளது. உத்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த அர்ஜுன் சிங் என்ற மாணவர், ஜபல்பூரில் உள்ள பிங்க் சிட்டி பிலஹரி பகுதியில் வாடகைக்கு அறை எடுத்து தங்கி, போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகி வந்தார். இவரது மைத்துனர் ரூபேந்திர சிங் இந்திய ராணுவத்தின் 33-வது அர்மாடு கோரில் நாயக் ஆகப் பணியாற்றி வருகிறார். விடுமுறையில் வந்திருந்த மைத்துனருடன் சேர்ந்து அர்ஜுன் சிங் கறி விருந்து சாப்பிடத் திட்டமிட்டு, கோராபஜார் அருகே உள்ள சிக்கன் கடைக்குக் கறி வாங்கச் சென்றுள்ளார்.
அங்கு கடையின் உரிமையாளர் சிக்கந்தரிடம் சிக்கனின் விலை குறித்து அர்ஜுன் சிங் கேட்டபோது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த வாக்குவாதம் விரைவில் தகராறாகவும், கெட்ட வார்த்தைகளால் திட்டித் தாக்கும் சூழலாகவும் மாறியது. அப்போது கடை உரிமையாளர் சிக்கந்தர் தனது கூட்டாளிகளை சம்பவ இடத்திற்கு வரவழைத்தார். அவர்கள் அனைவரும் சேர்ந்து அர்ஜுன் சிங் மற்றும் அவரது மைத்துனரைச் சூழ்ந்துகொண்டு, அர்ஜுன் சிங்கைத் தடிகளால் கொடூரமாகத் தாக்கியுள்ளனர். இதில் தலையிலும் உடலிலும் பலத்த காயமடைந்த அர்ஜுன் சிங் சுருண்டு விழுந்ததும், அவரை அருகில் இருந்த கந்தாரி சாக்கடை கால்வாயில் தூக்கி வீசியுள்ளனர்.
சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த கோராபஜார் காவல் நிலையப் போலீஸார், உள்ளூர் மக்களின் உதவியுடன் சாக்கடையில் கிடந்த அர்ஜுன் சிங்கை மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், அவர் வழியிலேயே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இக்கொலை வழக்கு தொடர்பாக முதன்மை குற்றவாளியான கடை உரிமையாளர் சிக்கந்தர் உட்பட 4 பேரை போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
