LATEST NEWS
மக்களுக்குக் கட்டுப்பாடு, அமைச்சருக்கு மட்டும் சலுகையா..? முதுமலை வனப்பகுதியில் அமைச்சர் வன்னி அரசுவின் வைரல் ‘ரீல்ஸ்’ சர்ச்சை..!!
நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பக வனப்பகுதிக்குள் அமைச்சர் வன்னி அரசு சென்ற ட்ரெக்கிங் வீடியோக்கள் வெளியாகிப் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன. நவம்பர் 10-ஆம் தேதி தனது குடும்பத்தினருடன் முதுமலைக்குச் சென்ற அவர், பொக்காபுரம் வெளி மண்டல வனப்பகுதிக்குள் சுமார் 5 கிலோமீட்டர் தூரம் நடைப்பயணம் (ட்ரெக்கிங்) மேற்கொண்டதாக சொல்லப்படுகிறது. அப்போது அங்கு நடந்து சென்ற புலியை நோக்கி அவர் ஓடியது, யானை உள்ளிட்ட வனவிலங்குகளைக் கண்டது மற்றும் வனத்துறை வாகனத்தின் மீது அமர்ந்திருந்தது போன்ற காட்சிகளை இன்ஸ்டாகிராம் ரீல்ஸாகப் பதிவிட்டது சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.
முதுமலை வனப்பகுதியில் சுற்றுலாப் பயணிகளை அழைத்துச் செல்லும் ஜீப்புகளுக்கும், தங்கும் விடுதிகளுக்கும் வனத்துறை கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளதால் உள்ளூர் மக்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுப் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இவ்வாறு பொதுமக்களுக்கும் சுற்றுலாப் பயணிகளுக்கும் பல்வேறு கட்டுப்பாடுகள் அமலில் இருக்கும் சூழலில், அமைச்சருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் மட்டும் வனப்பகுதிக்குள் நடந்து செல்ல வனத்துறையினர் எவ்வாறு அனுமதி வழங்கினர் என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்த விவகாரம் குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த முதுமலை புலிகள் காப்பக கள இயக்குநர் கிருபா சங்கர், இது குறித்துத் தனக்கு எந்தத் தகவலும் தெரியாது என்றும், உடனடியாக இது பற்றி விசாரிப்பதாகவும் தெரிவித்துள்ளார். வனவிலங்கு பாதுகாப்பு விதிகளை மீறி அமைக்கப்பட்ட இந்தப் பயணம் குறித்து வனத்துறையின் அடுத்தகட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
