LATEST NEWS
அய்யோ கொடுமையே..! விநாயகர் விசர்ஜன ஊர்வலத்தில் அலறிய DJ… வகுப்பறையில் பரிதாபமாகத் துடிதுடித்த 7 வயது பிஞ்சு உயிர்..! கதறி துடிக்கும் பெற்றோர்..!!
உத்தரப் பிரதேசம், பல்ராம்பூர் நகரின் சிட்டி பேலஸ் பகுதியில் அமைந்துள்ள டிவைன் பப்ளிக் பள்ளியில் திங்கள்கிழமை காலை வழக்கம்போல் வகுப்புகள் நடந்து கொண்டிருந்தன. வகுப்பறையில் 2-ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த வைஷ்ணவி என்ற 7 வயது சிறுமி பாடங்களைக் கவனித்துக் கொண்டிருந்தார். அப்போது பள்ளிக்கு வெளியே விநாயகர் விசர்ஜன ஊர்வலத்தின் போது மிக அதிக சத்தத்துடன் டிஜே இசைக்கப்பட்டு வந்தது. அதன் அதிகப்படியான அதிர்வு மற்றும் பேரிரைச்சலால் வகுப்பறையில் இருந்த வைஷ்ணவிக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு பதற்றமடைந்தார். பயத்தின் காரணமாக அவரால் ஆசிரியரிடம் கூட எதுவும் சொல்ல முடியவில்லை. மயக்கமடைவதற்கு முன் அச்சிறுமி மூன்று முறை பெஞ்சில் இருந்து எழுந்து நிற்க முயன்றும், முடியாமல் கீழே விழுந்த காட்சி பள்ளியின் சிசிடிவி கேமராவில் பதிவாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
சிறுமி உணர்வற்று விழுந்ததைக் கண்ட ஆசிரியர்கள் அதிர்ச்சியடைந்து உடனடியாக அவரைப் பெஞ்சில் படுக்க வைத்து முதலுதவி செய்து உணர்வு வரவழைக்க முயன்றனர். ஆனால் சிறுமியின் நிலைமை மோசமடைந்ததால், பள்ளி மேலாளர் ஆசிஷ் உபாத்யாயா உடனடியாக அச்சிறுமியை மாவட்ட அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றார். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் சிறுமி ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த சிறுமியின் தந்தை சோனு திவாரி மற்றும் குடும்பத்தினர் பெரும் சோகத்தில் மூழ்கியுள்ளனர். காலையில் சிரிக்கச் சிரிக்கப் பள்ளிக்கு அனுப்பி வைத்த மகள் பிணமாக மீண்டது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பள்ளி மேலாளர் கூறுகையில், விநாயகர் விசர்ஜன ஊர்வலம் காரணமாக பள்ளிக்கு மதியம் 12 மணிக்கு முன் கூட்டியே விடுமுறை அளிக்கத் திட்டமிட்டிருந்ததாகவும், ஆனால் விடுமுறை அளிப்பதற்குச் சில நிமிடங்களுக்கு முன்பே இந்தத் துயரச் சம்பவம் நடந்துவிட்டதாகவும் தெரிவித்தார். சிசிடிவி காட்சிகளின் மூலம் டிஜே சத்தத்தின் போது தான் சிறுமிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது என்பது தெளிவாகத் தெரிகிறது. இதுகுறித்து நகரக் காவல் அதிகாரி அபிஷேக் சிங் தெரிவிக்கையில், டிஜே சத்தத்தால் மாணவி உயிரிழந்த சம்பவம் தொடர்பாகக் காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருவதாகவும், பெற்றோர் தரப்பில் இருந்து புகார் மனு அளிக்கப்பட்டதும் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.
