CINEMA
டெல்லியில் 10 நிமிட சந்திப்பு…சென்னை திரும்பியதும் வேட்டிக்கு மாறிய விஜய்…இனிமேல் ‘கறை வேட்டி’ இல்ல பட்டு வேட்டிதான்! விமரிசகர்களுக்கு அதிரடியாகப் பதிலடி கொடுத்த சி.எம் விஜய்…!
தமிழக அரசியல் வரலாற்றில் இதுவரை இல்லாத புதிய மாற்றமாக, முதலமைச்சராகப் பதவியேற்றது முதல் தொடர்ந்து ‘கோட்-சூட்’ மட்டுமே அணிந்து அதிகாரப்பூர்வப் பணிகளைச் செய்து வருகிறார் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் சி. ஜோசப் விஜய். தமிழக அரசியல்வாதிகளின் வழக்கமான ‘கறை வேட்டி’ கலாசாரத்தை ஓரமாக ஒதுக்கி வைத்துவிட்டு, விஜய் கொண்டு வந்த இந்த நவீன உடை மாற்றம் தவெக தொண்டர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. எனினும், அண்மையில் டெல்லி சென்று பிரதமர் மோடியை 10 நிமிடங்களுக்கும் குறைவாகச் சந்தித்தது மற்றும் டெல்லி மரபுகளை மீறிச் செய்தியாளர்களைச் சந்திக்காமல் புறக்கணித்தது போன்ற விஷயங்களுக்காகவும், அவரது தொடர் கோட்-சூட் உடைக்காகவும் மாற்றுத் திறனாய்வாளர்களால் விஜய் கடுமையாக விமரிசிக்கப்பட்டு வந்தார்.
சட்டப்பேரவைத் தேர்தலில் தனிப் பெரும்பான்மை இல்லாததால் விசிக, காங்கிரஸ், இடதுசாரிகள் மற்றும் முஸ்லீம் லீக் ஆகிய கட்சிகளின் ஆதரவோடு கூட்டணி ஆட்சி அமைத்துள்ள விஜய், “ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு” என்ற முழக்கத்தைச் செயல்படுத்தித் தனது அமைச்சரவையில் கூட்டணிக் கட்சிகளுக்கு இடம் கொடுத்துப் பாராட்டுக்களைப் பெற்றார். அரசியல் களம் இப்படித் பரபரப்பாக நகர்ந்து கொண்டிருக்கும் சூழலில், முதலமைச்சரான பிறகு முதன்முறையாகத் தனது ‘கோட்-சூட்’ உடையிலிருந்து மாறி, தமிழர்களின் பாரம்பரிய பட்டு வேட்டி, சட்டையில் வலம் வந்து சமூக வலைத்தளங்களை அதிர வைத்துள்ளார் விஜய்.
சென்னை நீலாங்கரையில் அமைந்துள்ள தனது மேலாளர் ஜெகதீஷ் பழனிசாமியின் இல்லத்தில் நடைபெற்ற சுப நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்வதற்காகவே முதலமைச்சர் விஜய் இந்தத் திடீர் உடை மாற்றத்துடன் வருகை தந்தார். பட்டு வேட்டி சட்டையில் மாஸாக நுழைந்த விஜய்யை அங்கிருந்தவர்கள் பலத்த கரகோஷத்துடன் வரவேற்றனர். குறிப்பாக, ஜெகதீஷின் தாயார் முதலமைச்சர் விஜய்யை வாஞ்சையோடு கட்டியணைத்து, “நீங்கள் வந்தது ரொம்ப சந்தோஷம்” என்று நெகிழ்ச்சியுடன் கூறிய வீடியோ தற்போது இணையத்தில் காட்டுத்தீயாய் பரவி ட்ரெண்டாகி வருகிறது. நடிகர் கதிர் உள்ளிட்ட திரையுலகப் பிரபலங்களும் கலந்துகொண்ட இந்தத் தனியார் நிகழ்ச்சியின் மூலம், “விஜய் வேட்டி கட்ட மாட்டாரா?” என்று கிண்டல் செய்த விமரிசகர்களுக்கு அவர் உடை மூலமாகவே நச் பதிலடி கொடுத்துள்ளதாக தவெகவினர் கொண்டாடி வருகின்றனர்.
