LATEST NEWS
முதலமைச்சர் டீப் ஸ்லீப் மோடுல இருக்காரு…! “விஜய் சார்.. தமிழ்நாடு தாங்காது…” தவெக அரசை வறுத்தெடுத்த உதயநிதி ஸ்டாலின்…!!
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு முழுமையாகச் சீர்குலைந்துவிட்டதாக தற்போதைய தவெக ஆட்சிக்கு எதிராக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் சமூக வலைத்தளப் பக்கத்தில் கடுமையான சாடல்களை முன்வைத்துள்ளார். கடலூர் மாவட்டம் வடலூர் அருகே 25 வயது மதிக்கத்தக்க இளம் பெண் ஒருவரின் சடலம் பாதி உடல் புதைந்த நிலையில், முகம் சிதைக்கப்பட்டு கொடூரமாகக் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாநிலம் முழுவதும் நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வரும் இத்தகைய கொலை, கொள்ளை மற்றும் பாலியல் வன்கொடுமை போன்ற குற்றச் சம்பவங்கள் பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியிருப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தேர்தல் பிரச்சாரக் காலங்களில் மேடைகளில் சட்டம் ஒழுங்கு குறித்துப் பஞ்ச் டயலாக்குகளைப் பேசிய தமிழக முதலமைச்சர் விஜய் அவர்கள், தற்பொழுது பொறுப்பிற்கு வந்த பிறகு ‘ஆழ்ந்த உறக்க நிலைக்கு’ (Deep Sleep Mode) சென்றுவிட்டார் என்றும் உதயநிதி விமர்சித்துள்ளார். மேலும், பெண்களின் பாதுகாப்புக்காக தவெக அரசு அறிவித்திருந்த ‘சிங்கப்பெண் அதிரடிப்படை’ திட்டத்தின் தொடக்க விழா கடைசி நேரத்தில் திடீரென ரத்து செய்யப்பட்டிருப்பதைக் கடுமையாகச் சாடியுள்ளார். வெறும் சீருடையையும், பெயரையும் மாற்றுவது மட்டுமே மாற்றமாகிவிடாது என்றும், சட்டம் ஒழுங்கைக் காப்பாற்றுவதை முதலமைச்சர் பொறுப்பற்ற முறையில் தள்ளிப்போடுவதைத் தமிழ்நாடு தாங்காது என்றும் அவர் தனது பதிவில் காட்டமாகத் தெரிவித்துள்ளார்.
