LATEST NEWS
இவரு தான் உண்மையான கோடீஸ்வரர்…! சொந்த வயிறே காய்ந்தாலும் பிறர் துயரம் துடைத்த வள்ளல்.. ஒரு நாள் பிச்சைக்காசு முழுவதையும் அசாம் வெள்ளத்திற்கு அள்ளித்தந்த முதியவர்..!!
அசாம் மாநிலத்தில் ஏற்பட்டுள்ள கடுமையான வெள்ளப் பெருக்கினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக, யாசகம் பெற்று வாழும் முதியவர் ஒருவர் தனது அன்றாட வருமானம் முழுவதையும் நிதியுதவியாக வழங்கிய நெகிழ்ச்சியான சம்பவம் அரங்கேறியுள்ளது. வெள்ள நிவாரண நிதி திரட்டும் தன்னார்வலர்களுக்கு இந்த முதியவர் செய்த உதவி குறித்த வீடியோ, தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி லட்சக்கணக்கான மக்களின் இதயங்களைத் தொட்டு வருகிறது.
இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்ட அந்த வீடியோவில், சில இளைஞர்கள் சாலையோரம் நின்று அசாம் வெள்ளப்பெருக்குக்காகப் பொதுமக்களிடம் நிதி சேகரித்துக் கொண்டிருக்கின்றனர். அப்போது அங்கு வந்த ஒரு வயதான முதியவர், வெள்ளப் பாதிப்பு குறித்து இளைஞர்கள் பேசுவதைக் கேட்டு, எவ்விதத் தயக்கமும் இன்றித் தனது பாக்கெட்டில் இருந்த மொத்தப் பணத்தையும் நிதியுதவிப் பெட்டியில் போட முன்வந்தார். அந்தப் பணம் முழுவதும் அவர் அன்று பகல் முழுவதும் மக்களிடம் கையேந்திப் பெற்ற முழு நாளின் வருமானம் என்பது குறிப்பிடத்தக்கது.
https://www.instagram.com/reel/DbWL-BTTUZa/?utm_source=ig_web_button_share_sheet
தங்களின் சொந்த வாழ்க்கையே பெரும் போராட்டமாக இருந்தபோதிலும், மற்றவர்களின் துயரத்தைத் துடைக்க அவர் காட்டிய தாராள மனதைக் கண்டு அங்கிருந்த தன்னார்வலர்கள் கண்கலங்கிப் போயினர். அவரது ஏழ்மை நிலையை உணர்ந்த இளைஞர்கள் சிலர், அந்தப் பணத்தை அவரிடமே திரும்பக் கொடுக்க முயன்றனர். ஆனால், உதவி செய்வதற்குப் பணக்காரராக இருக்க வேண்டிய அவசியமில்லை, நல்ல உள்ளமும் இரக்க குணமும் இருந்தாலே போதும் என்பதை நிரூபிக்கும் வகையில் அந்தப் பணத்தை அவர் மகிழ்ச்சியோடு வழங்கினார். இணையவாசிகள் பலரும் “உண்மையான மனிதநேயம் இன்னும் உயிரோடுதான் இருக்கிறது” என இந்த முதியவரைப் பாராட்டி வருகின்றனர்.
