LATEST NEWS
பகீர்..! நடுவானில் ரத்த வெள்ளத்தில் விழுந்த பைலட்.. 180 பயணிகளுடன் சென்ற இஸ்ரேல் விமானத்தில் கடத்தல் அலர்ட்.. அடுத்தடுத்து நடந்த பரபரப்பு சம்பவங்களால் அதிர்ச்சி..!!
துபாயில் இருந்து இஸ்ரேல் நாட்டின் தலைநகர் டெல் அவிவ் நோக்கி 180 பயணிகளுடன் புறப்பட்ட போயிங் 737 மேக்ஸ் 8 ரக பயணிகள் விமானத்தில், நடுவானில் திடீர் கடத்தல் எச்சரிக்கை விடுக்கப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. விமானம் புறப்பட்ட சில மணி நேரங்களிலேயே, விமானிகள் அமர்ந்திருக்கும் காக்பிட் அறையில் அவர்களுக்குள் திடீரெனக் கடுமையான சண்டை மூண்டுள்ளது. இதன் காரணமாக, விமானம் வழக்கத்திற்கு மாறாக 15,000 அடி உயரத்தில் தாழ்வாகப் பறந்ததோடு, ‘விமான கடத்தல்’ மற்றும் ‘பொது அவசரநிலை’ ஆகிய ஆபத்தான எச்சரிக்கை சமிஞ்சைகள் இஸ்ரேல் கட்டுப்பாட்டு அறைக்கு அனுப்பப்பட்டன.
இந்த அதிர்ச்சித் தகவலையடுத்து, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு நாட்டின் பாதுகாப்பு அமைச்சருடன் அவசர ஆலோசனையில் ஈடுபட்டார். மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இஸ்ரேலிய வான்வெளியும் உடனடியாக மூடப்பட்டது. இதனால் நடுவானில் தவித்த அந்தப் பயணிகள் விமானம், ஜோர்டான் வான்வெளிக்குள் நுழைந்து பின்னர் சவுதி அரேபியாவை நோக்கித் திருப்பப்பட்டு, அங்குள்ள தபூக் விமான நிலையத்தில் அவசர அவசரமாகப் பத்திரமாகத் தரையிறக்கப்பட்டது.
விமானத்தில் பயணித்த மிரியம் என்ற பயணி, விமானி அறையிலிருந்து அலறல் சத்தம் கேட்டதாகவும், கதவைத் திறந்தபோது ஒரு விமானி ரத்தக் காயங்களுடன் தரையில் கிடந்ததைக் கண்டதாகவும் தெரிவித்துள்ளார். எனினும், இந்தச் சலசலப்பு விமானிகளுக்குள் ஏற்பட்ட தனிப்பட்ட மோதலால் நிகழ்ந்ததா அல்லது திட்டமிட்டுச் செய்யப்பட்டதா என்பது குறித்து முழு விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை. இறுதியாக, இந்தச் சம்பவம் விமானக் கடத்தல் கிடையாது என்று இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் அதிகாரப்பூர்வமாகத் தெளிவுபடுத்தியுள்ளது.
