LATEST NEWS
ஐயோ கொடுமையே…! குரங்கை விரட்ட போயி நேர்ந்த கொடூரம்… ஒரே நொடியில் குடும்பத்தையே நிலைகுலைய வைத்த பகீர் சம்பவம்..!!
உத்தரப் பிரதேச மாநிலம் பரேலியில் உள்ள கேன்ட் காவல் எல்லைக்குட்பட்ட பௌஆபூர் கிராமத்தில் குரங்குகளின் தொல்லை காரணமாக பெரும் துயரம் நிகழ்ந்துள்ளது. வீட்டின் கூரை மீது குரங்குகளை விரட்டச் சென்ற 39 வயதான கூலித் தொழிலாளி தர்மபால் காஷ்யப் என்பவரை குரங்குக்கூட்டம் துரத்தியுள்ளது. குரங்குகளிடம் இருந்து தப்பிக்க முயன்றபோது அவர் நிலைதடுமாறி கூரையிலிருந்து கீழே விழுந்து தலையில் பலத்த காயமடைந்தார். குடும்பத்தினர் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில், தீவிர சிகிச்சை பலனின்றி திங்கள்கிழமை நள்ளிரவு அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இவரது மறைவால் அவரது மனைவி மற்றும் 4 குழந்தைகள் ஆதரவின்றி தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இச்சம்பவம் குறித்து தர்மபாலின் மகன் சுபாஷ் கூறுகையில், திடீரென வீட்டிற்குள் புகுந்த குரங்குக்கூட்டத்தை விரட்டுவதற்காகவே தர்மபால் கூரை மீது ஏறியுள்ளார். அப்போது குரங்குகள் அவரைத் துரத்தியதால் தடுமாறி கீழே விழுந்து தலையில் தீவிர காயம் ஏற்பட்டது. உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு சென்று உயிரைக் காப்பாற்ற முயன்றபோதிலும் பலனளிக்கவில்லை. இதுகுறித்து தகவலறிந்து வந்த காவல்துறையினர் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். கூலி வேலை செய்து குடும்பத்தைக் காப்பாற்றி வந்த தர்மபாலின் மறைவு, அக்குடும்பத்தினருக்கு பெரும் அதிர்ச்சியையும் துயரத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
அதே கேன்ட் பகுதியில் குரங்கு தாக்குதலால் மற்றொரு சம்பவமும் நடந்துள்ளது. சனேட்டி கிராமத்தைச் சேர்ந்த 35 வயதான பிந்து என்ற பழைய பொருட்கள் சேகரிக்கும் நபர், காந்தர்பூர் கிராமத்தில் வேலை செய்து கொண்டிருந்தபோது குரங்குக்கூட்டம் திடீரெனத் தாக்கியதில் அவரது கையில் கடிபட்டது. சுற்றியிருந்தவர்கள் குரங்குகளை விரட்டியடித்த நிலையில், காயமடைந்த பிந்து மாவட்ட அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இப்பகுதியில் தொடர்ந்து குரங்குகள் வீட்டின் கூரைகளிலும் தெருக்களிலும் சுற்றித் திரிவதாலும், தொடர் தாக்குதல்களாலும் கிராம மக்கள் பெரும் அச்சத்தில் வாழ்ந்து வருகின்றனர்.
