LATEST NEWS
“நாங்க என்ன உப்புக்கு சப்பாணியா..?” தவெகவில் இணைந்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள் குமுறல்… வெடித்தது புதிய உட்கட்சிப் பிரச்சனை..!!
அதிமுக தலைமை மீது அதிருப்தி அடைந்து தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த முன்னாள் அமைச்சர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகளுக்கு இதுவரை உட்கட்சிப் பொறுப்புகள் எதுவும் வழங்கப்படாதது பெரும் அரசியல் விவாதமாக உருவெடுத்துள்ளது. எம்.சி. சம்பத், கடம்பூர் ராஜு, உடுமலை ராதாகிருஷ்ணன், சி.விஜயபாஸ்கர், எம்.ஆர். விஜயபாஸ்கர், எஸ். வளர்மதி, எம்.எஸ்.எம். ஆனந்தன் மற்றும் முன்னாள் எம்பி இளவரசன் உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் தவெகவில் தங்களை இணைத்துக் கொண்டனர்.
கடந்த ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் நடைபெற்ற இரண்டு கட்ட இணைப்பு நிகழ்வுகள் மூலம், தவெகவில் இணைந்த இவர்களுக்கு மாவட்டம், மண்டலம் அல்லது மாநில அளவிலான எந்தவொரு அதிகாரப்பூர்வப் பொறுப்பும் இதுவரை வழங்கப்படவில்லை எனத் தெரிகிறது. கட்சியில் இணைந்து ஒரு மாதத்திற்கும் மேலாகியும் தங்களுக்கு உரிய முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை என்று அவர்கள் கருதுவதாகக் கூறப்படுகிறது.
தங்களுக்கு எந்தவித அதிகாரமும், பொறுப்புகளும் இன்றி சாதாரண தொண்டர்களைப் போல தங்களை நடத்துவதாக இந்த முன்னாள் அமைச்சர்களும் நிர்வாகிகளும் தங்களுக்குள் வேதனை தெரிவித்து வருவதாக அரசியல் வட்டாரங்களில் தகவல்கள் கசிந்துள்ளன. இந்த உட்கட்சி அதிருப்தி விவகாரம் தவெக மற்றும் தமிழக அரசியல் வட்டாரத்தில் தற்போது புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
