LATEST NEWS
அதிர்ச்சி..! சென்னை விமான நிலைய நிர்வாகத்தை தனியாருக்கு மாற்றக் கோரி பிரதமருக்கு முதலமைச்சர் விஜய் கடிதம்…!!
சென்னை விமான நிலைய நிர்வாகத்தை இந்திய விமான நிலையங்கள் ஆணையத்திடமிருந்து மாற்றி, வேறொரு தனியாரிடமோ அல்லது நிறுவனத்திடமோ ஒப்படைக்கக் கோரி தமிழ்நாடு முதலமைச்சர் சி. ஜோசப் விஜய், பிரதமர் நரேந்திர மோடிக்குக் கடிதம் எழுதியுள்ளார். கடந்த ஆகஸ்ட் மாதம் அனுப்பப்பட்ட இக்கடிதம் தற்போது வெளியாகியுள்ளது. தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்கும், சர்வதேச உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கும் இந்த நிர்வாக மாற்றம் அவசியம் என இக்கடிதத்தில் தமிழக அரசு தரப்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் அமைக்கத் திட்டமிடப்பட்டிருந்த பசுமை வழி விமான நிலையத் திட்டத்தை அண்மையில் தமிழக அரசு கைவிடுவதாக அறிவித்திருந்தது. அதன் தொடர்ச்சியாக, தற்போது பயன்பாட்டில் இருக்கும் மீனம் பாக்கம் சென்னை விமான நிலையத்தை விரிவுபடுத்தவும், அதன் நிர்வாகத்தை மேம்படுத்தவும் இந்த அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. டெல்லியிலுள்ள தலைமை அலுவலக ஒப்புதல்களுக்காகக் காத்திருப்பதால் ஏற்படும் காலதாமதத்தைத் தவிர்க்கவே இந்த கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
பொதுவாக ஒன்றிய அரசின் தனியார்மயமாக்கல் திட்டங்களுக்குப் பல்வேறு மாநில அரசுகள் எதிர்ப்புத் தெரிவித்து வரும் நிலையில், தமிழகத்தின் தவெக அரசே நிர்வாகத்தை மாற்றக் கோரி கடிதம் எழுதியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முதலமைச்சர் விஜயின் இந்த ரகசியக் கடிதத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகள் மற்றும் எதிர்க்கட்சிகள் தங்களது பலத்த கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றன.
