LATEST NEWS
அதிர்ச்சி..! முதல்வர் பாதுகாப்புப் பணியில் இருந்த 11 காவலர்கள் திடீர் வாந்தி, மயக்கம்… மருத்துவமனையில் அனுமதி..!!
சென்னை கிழக்கு கடற்கரைச் சாலையில் முதலமைச்சர் விஜய் செல்லும் வழியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த 11 காவலர்களுக்கு திடீரென வாந்தி, மயக்கம் ஏற்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட காவலர்கள் அனைவரும் உடனடியாக மீட்கப்பட்டு சிகிச்சைக்காக திருவான்மியூர் மாநகராட்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
பாதுகாப்புப் பணியில் இருந்த 53 காவலர்களுக்கு மதிய உணவாக அவர்களின் பட்டாலியன் கம்பெனி உணவகத்திலிருந்து சிக்கன் பிரியாணி வழங்கப்பட்டதாகத் தெரிகிறது. அந்த உணவைச் சாப்பிட்ட பிறகே 11 காவலர்களுக்கு அடுத்தடுத்து கடுமையான தலைச்சுற்றல் மற்றும் வாந்தி மயக்கம் ஏற்பட்டுள்ளது. அவர்கள் சாப்பிட்ட பிரியாணி உணவில் பல்லி விழுந்திருந்ததே இந்த உடல்நலக்குறைவுக்குக் காரணம் என முதற்கட்ட விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளது.
தகவலறிந்தவுடன் விரைந்து செயல்பட்ட மருத்துவக் குழுவினர், பாதிக்கப்பட்ட காவலர்களுக்குத் தீவிர சிகிச்சை அளித்தனர். திருவான்மியூர் மாநகராட்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 11 காவலர்களும் தற்போது உரிய சிகிச்சைக்குப் பின் குணமடைந்து, முற்றிலும் நலமுடன் இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் மற்றும் காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
