LATEST NEWS
“அடக்கொடுமையே.. கொஞ்சம் கால் நழுவினாலும் முடிஞ்சுது சோலி..! 20 வருஷமா ஓட்டு மட்டும் வாங்கத் தெரியுது… ஒரு சின்ன பாலம் கட்ட முடியலையா உங்கனால..?” ராஜஸ்தானை உலுக்கும் வைரல் வீடியோ… கொதித்தெழும் மக்கள்..!!
அரசாங்கங்கள் கல்வி மேம்பாடு மற்றும் உள்கட்டமைப்பு குறித்து உயர்ந்த கூற்றுக்களை முன்வைத்து வரும் வேளையில், ராஜஸ்தானின் பிரதாப்கர் மாவட்டம், உடியாகேடி கிராமத்தில் இருந்து வெளிவந்துள்ள ஒரு அதிர்ச்சியூட்டும் காணொளி அந்த வாக்குறுதிகளை அம்பலப்படுத்தியுள்ளது. அங்குள்ள ஒரு சாக்கடையின் மீது பாலம் இல்லாததால், பள்ளிக்குச் செல்லும் அப்பாவிப் குழந்தைகள் தங்கள் உயிரைப் பணயம் வைத்து, அதன் குறுக்கே கிடத்தப்பட்டுள்ள ஒரு மரத்தடியின் மீது கவனமாக அடியெடுத்து வைத்துச் செல்லும் காட்சி சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி, நிர்வாகத்தை குற்றவாளிக் கூண்டில் நிறுத்தியுள்ளது.
இந்திய சுதந்திரம் அடைந்து பல தசாப்தங்கள் கடந்தும் தங்கள் கிராமத்தின் நிலை மாறவில்லை என்றும், மழைக்காலத்தில் சாக்கடை நிரம்பி வழிவதால் கிராமம் முழுமையாகத் துண்டிக்கப்படுவதாகவும் அப்பகுதி மக்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர். “கடந்த 20 ஆண்டுகளாக இந்த வடிகாலின் மீது பாலம் கட்டக் கோரி நிர்வாகத்திடமும் அரசாங்கத்திடமும் மன்றாடி வருகிறோம். தேர்தல் நேரத்தில் வாக்குறுதி அளிக்கும் அரசியல்வாதிகள், அதன் பின் கண்டுகொள்வதில்லை. இதனால் ஒவ்வொரு ஆண்டும் எங்கள் பிள்ளைகள் உயிருக்குப் பயந்தே பள்ளிக்குச் செல்கின்றனர்” என்று அப்பகுதியைச் சேர்ந்த பாபுலால் தெரிவித்துள்ளார்.
குழந்தைகளின் இந்த ஆபத்தான பயணக் காணொளி இணையத்தில் வைரலானதைத் தொடர்ந்து, பொதுமக்களிடையே பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. ஏதேனும் பெரிய விபத்து நிகழ்ந்த பிறகுதான் அதிகார வர்க்கம் விழித்துக்கொள்ளுமா என்று மக்கள் கடுமையான கேள்விகளை எழுப்பி வருகின்றனர். இந்த வைரல் காணொளிக்குப் பிறகாவது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து, உடியாகேடி கிராம மக்களின் 20 ஆண்டுகாலப் பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வு காண்பார்களா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
