LATEST NEWS
மீண்டும் சுனாமி வந்தா சுறா மாதிரி போய் விஜய் தடுத்து நிறுத்துவாரா..? தவெகவை கிழித்து தொங்கவிட்ட CPIM மாநிலச் செயலாளர் பெ.சண்முகம்..!!
தமிழக வெற்றிக் கழக அரசின் புதிய தலைமைச் செயலக கட்டுமானத் திட்டத்தை விமர்சித்துள்ள சிபிஐஎம் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம், கடற்கரையோரம் அமையவிருக்கும் இந்தத் திட்டத்தால் ஏற்படக்கூடிய இயற்கை பேரிடர் ஆபத்துகள் குறித்துக் கடுமையான கேள்விகளை எழுப்பியுள்ளார். பட்டினப்பாக்கம் பகுதி ஏற்கனவே சுனாமி பாதிப்பால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட ஒன்று என்பதைச் சுட்டிக்காட்டியுள்ள அவர், அங்கு புதிய தலைமைச் செயலகத்தைக் கட்டுவது பாதுகாப்பானது அல்ல என்ற ரீதியில் தனது கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார்.
முதலமைச்சர் விஜய்யின் சினிமாப் படக் கதாபாத்திரங்களை எள்ளலாகக் குறிப்பிட்டுப் பேசிய சண்முகம், “மீண்டும் சுனாமி வந்தால், படத்தில் வருவது போல சுறா மாதிரி போய் முதலமைச்சர் விஜய் அதைத் தடுத்து நிறுத்தி விடுவாரா?” என்று காரசாரமாகக் கேள்வி எழுப்பியுள்ளார். ஒருவேளை கடலோரப் பகுதியில் அமையவிருக்கும் புதிய தலைமைச் செயலகம் சுனாமியால் அடித்துச் செல்லப்பட்டால், அதற்கு யார் பொறுப்பேற்பது என்றும் அவர் த.வெ.க. அரசை நோக்கிக் கேட்டுள்ளார்.
மேலும், இந்தப் பகுதியில் மீண்டும் சுனாமி போன்ற பேரழிவு வராது என்ற எவ்வித உத்தரவாதத்தையும் தமிழ்நாடு அரசால் தற்போதைய சூழலில் தர முடியுமா என்றும் அவர் வினவியுள்ளார். கடலோரப் பகுதிகளில் இதுபோன்ற பிரம்மாண்டமான அரசு உள்கட்டமைப்புகளை உருவாக்குவது சுற்றுச்சூழல் மற்றும் பாதுகாப்பு ரீதியாகப் பெரும் ஆபத்துகளை விளைவிக்கும் என்றும் அவர் தனது உரையில் எச்சரித்துள்ளார்.
