LATEST NEWS
“நாளைக்கு அரசாங்கத்தையே தனியாருக்கு குடுத்துடுவீங்களா..?” சிபிஎம் மூத்த தலைவர் கனகராஜ் கேட்ட அதிரடி கேள்வி.. பரபரக்கும் அரசியல் களம்..!!
சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்தின் நிர்வாகத்தைத் தனியாருக்குத் தாரைவார்க்கக் கோரி, பிரதமர் நரேந்திர மோடிக்குத் தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் கடிதம் எழுதியுள்ளதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆ. கனகராஜ் கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார். தற்போதைய இந்திய விமான நிலையங்கள் ஆணையத்தின் நிர்வாகம் சர்வதேசத் தரத்திற்குப் போதுமானதாக இல்லை எனக் கூறி கடந்த ஆகஸ்ட் மாதம் இக்கடிதம் அனுப்பப்பட்டதாகக் கூறப்படுகிறது. மாநில அரசே முன்வந்து ஒரு பொதுத்துறை விமான நிலையத்தைத் தனியாருக்குக் கொடுக்கக் கோருவது இந்திய வரலாற்றிலேயே முதன்முறை எனச் சாடியுள்ள கனகராஜ், சேவை சரியில்லை என்பதற்காக அரசு நிறுவனத்தைத் தனியாரிடம் ஒப்படைப்பது எப்படிச் சரியான தீர்வாகும் எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
பிற மாநிலங்களில் மத்திய அரசு விமான நிலையங்களைத் தனியார்மயமாக்க முயன்ற போது, கேரளாவில் பினராயி விஜயன் அரசு “நாங்களே நடத்துகிறோம்” என்று உரிமை கோரியதைச் சுட்டிக்காட்டிய அவர், தமிழ்நாட்டில் மட்டும் இந்தத் தலைகீழ் நடவடிக்கை ஏன் என்று கேள்வி எழுப்பியுள்ளார். காஞ்சிபுரம் பரந்தூர் புதிய விமான நிலையத் திட்டம் அண்மையில் கைவிடப்பட்டதைத் தொடர்ந்து, தற்போதைய சென்னை விமான நிலையத்தையே தனியாருக்குத் தாரைவார்க்க முயற்சிப்பதாக அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. நாளை ஒரு அரசுத்துறை சரியாகச் செயல்படவில்லை என்றால் முழு அரசாங்கத்தையுமே தனியாரிடம் கொடுத்துவிடுவீர்களா என்று சரமாரியாகக் கேள்வி எழுப்பியுள்ள இடதுசாரித் தலைவர்கள், இந்தத் தனியார்மயக் கோரிக்கையைத் தமிழக அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.
