LATEST NEWS
“பணம் வேண்டாம், மீன் வறுவல் வாங்கி வா!” – சிட்டா வழங்க லஞ்சமாக மீன் குழம்பு கேட்ட விஏஓ அதிரடி சஸ்பெண்ட்..!!
கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் அருகே வங்கிக்கடன் பெறுவதற்காக சிட்டா நகல் கேட்டு விண்ணப்பித்த விவசாயியிடம், லஞ்சமாக மீன் வறுவல் மற்றும் மீன் குழம்பு பார்சல் கேட்ட கிராம நிர்வாக அலுவலர் (VAO) கார்த்திக் அதிரடியாகப் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். தேவர்மலை பகுதியைச் சேர்ந்த விவசாயி தேவராஜ் என்பவர் தனது விவசாயத் தேவைக்காக வங்கிக்கடன் பெற வேண்டி, சிட்டா நகல் கோரி விண்ணப்பித்திருந்தார். இந்த ஆவணத்தை வழங்குவதற்காக விஏஓ கார்த்திக், தேவராஜின் மகனைத் தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.
அப்போது பணமாக லஞ்சம் கேட்காமல், வினோதமான முறையில் ‘2 மீன் வறுவல் மற்றும் மீன் குழம்பு பார்சல்’ வாங்கி வருமாறு விவசாயியின் மகனிடம் விஏஓ கார்த்திக் போனில் வற்புறுத்தியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த விவசாயியின் மகன், விஏஓ தன்னிடம் உணவை லஞ்சமாகக் கேட்டுப் பேசிய அந்தத் தொலைபேசி உரையாடலைத் தனது மொபைல் போனில் ரகசியமாகப் பதிவு செய்துள்ளார். பின்னர், அந்த ஆடியோ பதிவை அவர் சமூக வலைதளங்களில் வெளியிட, அது மிக வேகமாகப் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த ஆடியோ ஆதாரம் சமூக ஊடகங்களில் வைரலாகி, பொதுமக்களிடையே கடும் அதிர்ச்சியையும் விமர்சனங்களையும் கிளப்பியது. இதுகுறித்து வருவாய்த்துறை உயர் அதிகாரிகளின் கவனத்திற்குச் சென்றதை அடுத்து, அரசு விதிமுறைகளை மீறி லஞ்சம் கேட்ட குற்றத்திற்காக விஏஓ கார்த்திக்கை தற்காலிக பணியிடை நீக்கம் செய்து கரூர் மாவட்ட அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
