LATEST NEWS
“மம்தாவுக்கு அடுத்தடுத்து பேரிடி” தேர்தல் களத்தில் இருந்து விலகிய 2-வது வேட்பாளர்: 3 மணி நேரத்தில் நடந்த மெகா டுவிஸ்ட்..!
மேற்கு வங்கத்தில் முன்னாள் முதலமைச்சர் மம்தா பானர்ஜிக்கு அவரது கட்சி வேட்பாளர் அறிவிப்பு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், அடுத்த சில மணி நேரங்களிலேயே அதில் ஒரு திருப்பம் ஏற்பட்டுள்ளது. அண்மையில் அங்கு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் பாஜகவிடம் ஆட்சியை இழந்த மம்தாவின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் பெரும் பிளவு ஏற்பட்டு, கட்சியின் பெயரும் சின்னமும் தேர்தல் ஆணையத்தால் முடக்கப்பட்டுள்ளன. இந்தச் சூழலில் நந்திகிராம் மற்றும் ரெஜிநகர் ஆகிய தொகுதிகளுக்கு அக்டோபர் 6-ம் தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே நந்திகிராம் தொகுதி மம்தா தரப்பு வேட்பாளர் மிலான் பிரதான் போட்டியில் இருந்து பின்வாங்கிய நிலையில், ரெஜிநகர் தொகுதி வேட்பாளரான ரைபுல் ஆலம் சவுத்ரியும் தான் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என திடீரென அறிவித்தார். தங்களுக்குப் புதிய சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளதால் மக்கள் அதனை அடையாளம் கண்டு வாக்களிப்பது கடினம் என்ற காரணத்தினாலேயே தான் இந்த முடிவை எடுத்ததாக அவர் விளக்கமளித்தார். அடுத்தடுத்து வேட்பாளர்கள் பின்வாங்கியது மம்தா பானர்ஜிக்கு அரசியல் ரீதியாகப் பெரும் பின்னடைவாகவும் அதிர்ச்சியாகவும் பார்க்கப்பட்டது.
இருப்பினும், இந்த அறிவிப்பு வெளியான 3 மணி நேரத்திற்குள் வேட்பாளர் சவுத்ரி தனது முடிவை மாற்றிக்கொண்டு மீண்டும் களமிறங்குவதாக அறிவித்து ‘யு-டர்ன்’ அடித்துள்ளார். அவர் விலகுவதாக அறிவித்த உடன் மம்தா பானர்ஜி அவரிடம் நேரில் பேசியுள்ளார்; “உங்களால் முடிந்த சிறந்த பங்களிப்பைத் தாருங்கள்” என மம்தா தைரியம் ஊட்டியதைத் தொடர்ந்தே தனது முடிவை மாற்றிக் கொண்டதாக சவுத்ரி தெரிவித்துள்ளார். தங்களை யாரும் மிரட்டவில்லை என்றும், வரும் சனிக்கிழமை முதல் தனது தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்கப் போவதாகவும் அவர் கூறியுள்ளார்.
