LATEST NEWS
செல்லங்களா என்ஜாய் பண்ணுங்க..! காட்டுக்குள்ளே ஒரு பூல் பார்ட்டி.. சேற்றுத் தண்ணீரில் குதித்து கியூட்டாக விளையாடிய புலிக்குட்டிகள்… காவல் காக்கும் தாய் புலி..!
மகாராஷ்டிராவின் தடோபா-அந்தாரி புலிகள் காப்பகத்தில் கடுமையான வெயில் மற்றும் உஷ்ணத்திலிருந்து தப்பிக்க, குட்டிப் புலிகள் சில காட்டின் நடுவே உள்ள ஒரு சேற்றுத் தண்ணீர்க் குழியில் ஜாலியாக விளையாடும் கியூட் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. தடோபாவில் பணியாற்றும் ராகுல் மங்கம் என்பவரால் முதலில் இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்ட இந்த வீடியோவில், நான்கு முதல் ஐந்து புலிக்குட்டிகள் தண்ணீரில் குதித்து, சேற்றைப் பூசிக் கொண்டு ‘பூல் பார்ட்டி’ கொண்டாடும் அழகான காட்சிகள் பதிவாகியுள்ளன.
இந்த வீடியோவின் மிக சுவாரசியமான விஷயம் என்னவென்றால், குட்டிகள் அனைத்தும் தண்ணீரில் இறங்கி எந்தவித கவலையுமின்றி விளையாடிக் கொண்டிருக்கும் போது, அவற்றின் தாய் புலி சற்று தொலைவில் கரையில் அமர்ந்து தன் குட்டிகளை மிகவும் கவனமாகப் பாதுகாத்து வருகிறது. குட்டிகள் விளையாடுவதை ரசித்தபடி, காட்டின் பிற விலங்குகளால் அவற்றுக்கு எந்த ஆபத்தும் வராதவாறு ஒரு பாதுகாவலனைப் போல அத்தாய் புலி தொடர்ந்து கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளது.
இந்தக் காட்சியை ஓய்வு பெற்ற இந்திய வனத்துறை அதிகாரி சுசாந்தா நந்தா தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்து, “ஒரு விழிப்புடன் இருக்கும் தாயின் கண்காணிப்பில் நடக்கும் மிகச்சிறந்த பூல் பார்ட்டி இது” என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார். காட்டில் உள்ள விலங்குகளின் தாய் பாசத்தையும், குட்டிகளின் மழலைத் தனத்தையும் அழகாக விவரிக்கும் இந்த வீடியோவை சமூக வலைதளவாசிகள் பலரும் பகிர்ந்து ‘மிகவும் மனதை உருக்கும் காட்சி’ எனக் கொண்டாடி வருகின்றனர்.
