CRIME
அடப்பாவி நீயெல்லாம் மனுஷனா.? பக்கத்துவீட்டு 13 வயது சிறுவன் கடத்திக் கொலை.. சடலத்துடன் தப்பியபோது கார் விபத்துக்குள்ளாகி மாட்டிய பட்டதாரி இளைஞர்.. திடுக்கிடும் பின்னணி…!!
பெங்களூரு யெலஹங்கா பகுதியில் கடன் தொல்லையைத் தீர்ப்பதற்காக, அண்டை வீட்டில் வசித்த 13 வயது சிறுவனைக் கடத்திச் சென்று கொடூரமாகக் கொலை செய்த லண்டன் பட்டதாரி இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். ஆந்திராவைச் சேர்ந்த பாஸ்கர் ரெட்டி (28) என்ற அந்த இளைஞர், லண்டனில் முதுகலை படிப்பை முடித்துவிட்டு பெங்களூரு தனியார் நிறுவனம் ஒன்றில் நிதித்துறையில் பணியாற்றி வந்தார். செப்டம்பர் 16 அன்று பட்டாசு வாங்கித் தருவதாகவும், கார் ஓட்டக் கற்றுத் தருவதாகவும் ஆசை வார்த்தை கூறி, பக்கத்து வீட்டுச் சிறுவனைத் தனது கூட்டாளியுடன் சேர்ந்து அவர் காரில் கடத்தியுள்ளார்.
சிறுவனை ஒரு பாழடைந்த கட்டிடத்திற்கு அழைத்துச் சென்று, அவனது கை, கால்களைக் கட்டி, தலையில் பலத்த காயம் ஏற்பட்டது போல் கட்டுப்போட்டு வீடியோ எடுத்துள்ளனர். “பணம் தராவிட்டால் கொன்றுவிடுவார்கள் என்று அப்பாவிடம் சொல்” என அச்சிறுவனை மிரட்டி வீடியோ பதிவு செய்து, மறுநாள் பெற்றோரிடம் பணம் பறிக்கத் திட்டமிட்டுள்ளனர். ஆனால், தங்களைச் சிறுவன் அடையாளம் காட்டிவிடுவான் என்ற பயத்தில், மரக்கிளை மற்றும் செங்கலால் சிறுவனின் தலையில் அடித்துக் கொடூரமாகக் கொலை செய்து, சடலத்தைக் காரின் டிக்கியில் மறைத்து வைத்துள்ளனர்.
கொலைக்குப் பின் சடலத்துடன் ஹைதராபாத் நெடுஞ்சாலையில் தப்பிச் செல்ல முயன்றபோது, பாஸ்கர் ரெட்டியின் கார் கட்டுப்பாட்டை இழந்து மின் கம்பம் மற்றும் அங்கிருந்த வாகனங்கள் மீது மோதி விபத்துக்குள்ளானது. விபத்தைக் கண்டு அக்கம் பக்கத்தினர் கூடி காரைச் சோதனையிட்டபோது, டிக்கியில் சிறுவனின் சடலம் இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்து போலீசாருக்குத் தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த சிக்காஜாலா போலீசார் பாஸ்கர் ரெட்டியைக் கைது செய்ததோடு, தப்பியோடிய அவரது கூட்டாளியைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
