CRIME
“காரை அங்க நிறுத்தாதீங்க…” ஆத்திரத்தில் செக்யூரிட்டி கார்டை கீழே தள்ளி மிருகத்தனமாக தாக்கிய வாடகைத்தாரர்.. சிசிடிவியில் சிக்கிய பகீர் காட்சி..!!
உத்தரப் பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில் உள்ள ஈகோ வில்லேஜ்-2 அடுக்குமாடி குடியிருப்பில், கார் நிறுத்துவதில் ஏற்பட்ட தகராறில் செக்யூரிட்டி கார்டை வாடகைக்கு தங்கியிருந்த நபர் ஒருவர் கொடூரமாகத் தாக்கிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த குடியிருப்பில் வாடகைக்கு வசித்து வரும் நவீன் பாஸ்வான் என்பவர், கார் நிறுத்தக் கூடாத தடைசெய்யப்பட்ட பகுதியில் தனது காரை நிறுத்தியுள்ளார். இதைக் கவனித்த அங்கிருந்த பாதுகாப்பு ஊழியர், காரை அங்கு நிறுத்த வேண்டாம் என்றும், அதற்குரிய பார்க்கிங் பகுதியில் கொண்டு போய் நிறுத்துமாறும் நவீனிடம் அறிவுறுத்தியுள்ளார்.
பாதுகாப்பு ஊழியர் சொன்னதால் கடுமையான கோபமடைந்த நவீன் பாஸ்வான், தனக்குப் பின்னால் லிஃப்டிற்குள் நுழைந்த அந்த பாதுகாப்பு ஊழியரை அதிரடியாகத் தாக்கத் தொடங்கினார். முதலில் அவரது கன்னத்தில் பலமாக அடித்த நவீன், பின்னர் அவரை கீழே தள்ளிவிட்டு மிருகத்தனமாக மிதித்துத் தாக்கியுள்ளார். இந்த கொடூரத் தாக்குதலைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட பாதுகாப்பு ஊழியர் சொசைட்டி நிர்வாகத்துடன் இணைந்து காவல் நிலையத்தில் புகார் அளித்தார். உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸார், இந்த விவகாரம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்து, செக்யூரிட்டி கார்டை கொடூரமாகத் தாக்கிய நவீன் பாஸ்வானை அதிரடியாகக் கைது செய்தனர்.
