CRIME
“பாத்ரூமில் விழுந்து இறந்தார்னு சொன்னாங்க..” கள்ளக்காதலனுடன் மனைவி போட்ட பயங்கர ஸ்கெட்ச்.. கணவனின் தற்கொலை நாடகத்தை உடைத்த பிரேதப் பரிசோதனை அறிக்கை.. பரபரப்பு பின்னணி..!!
பெங்களூரு பிதராஹள்ளியின் கித்தகனூர் முதன்மைச் சாலையில் உள்ள ஒரு வீட்டில், 40 வயதான முபாரக் பாஷா என்ற இறைச்சிக் கடை உரிமையாளர் முகத்திலும் விரைப்பகுதியிலும் கடுமையான காயங்களுடன், மூச்சுத்திணறடிக்கப்பட்டு மர்மமான முறையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்காதல் விவகாரத்தால் கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட தகராறில், இந்தத் துணிகரக் கொலை அரங்கேறியிருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர். தமிழ்நாட்டின் கிருஷ்ணகிரியைச் சேர்ந்த முபாரக்கின் சகோதரர் சாகுல் அளித்த புகாரின்படி, கடந்த செப்டம்பர் 9-ஆம் தேதி நள்ளிரவு 1 மணியளவில் முபாரக் குளியலறையைப் பயன்படுத்தும்போது இறந்துவிட்டதாக அவரது மனைவி ஷாஹினா பானு (37) குடும்பத்தினருக்குத் தகவல் கொடுத்துள்ளார். ஆனால், கிருஷ்ணகிரியில் இருந்து உறவினர்கள் வந்து சடலத்தைப் பார்க்க முயன்றபோது, ஷாஹினா அதைக் காட்ட மறுத்து ரகசியமாக மறைக்க முயன்றதால் சந்தேகம் வலுத்துள்ளது.
இதனையடுத்து போலீசார் நடத்திய பிரேதப் பரிசோதனையில், முபாரக்கின் மூக்கு மற்றும் தாடைப் பகுதிகளில் கீறல்களும் காயங்களும் இருந்ததுடன், அவர் கழுத்து நெரிக்கப்பட்டு மூச்சுத்திணறலால் உயிரிழந்ததும், அவரது விரைப்பகுதியில் கடுமையான காயம் ஏற்படுத்தப்பட்டிருந்ததும் மருத்துவ ரீதியாக உறுதி செய்யப்பட்டது. மனைவியின் கள்ளக்காதலன் நஹீம் உல்லா, மாமியார் ஹசீனா ஜான் மற்றும் மைத்துனர் ஆசிப் உள்ளிட்டோரின் கூட்டுச் சதியால் இந்தத் துணிகரக் கொலை நடந்திருக்கலாம் எனச் சகோதரர் சாகுல் குற்றம் சாட்டியுள்ளார். பிரேதப் பரிசோதனை அறிக்கையின் அதிரடித் திருப்பத்தைத் தொடர்ந்து, கொலையைத் தற்கொலையாக நாடகமாடிய மனைவி ஷாஹினா மற்றும் மாமியார் ஹசீனாவை அவலஹள்ளி போலீசார் அதிரடியாகக் கைது செய்து காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர். மேலும் தலைமறைவாக உள்ள கள்ளக்காதலன் நஹீம் உள்ளிட்ட பிற குற்றவாளிகளை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
