CRIME
“அய்யோ கொடுமையே…! நகையைத் திருப்பித் தர்றேன் வாங்க..” நம்பிப் போன பெண் டாக்டருக்கு நேர்ந்த விபரீதம்… இன்ஸ்டாகிராம் நட்பால் நடந்த கொடூர சம்பவம்..!!
தெலுங்கானா மாநிலம், சங்கரெட்டி மாவட்டம், சாந்தி நகரைச் சேர்ந்தவர் ஸ்ருஜனா (27). இவர் ஹனுமகொண்டாவில் உள்ள மருத்துவக் கல்லூரியில் முதுகலை குழந்தைகள் மருத்துவம் முதலாம் ஆண்டு படித்துக் கொண்டே, தனியார் மருத்துவமனை ஒன்றிலும் பணியாற்றி வந்தார். இந்நிலையில், ஸ்ருஜனாவுக்கு இன்ஸ்டாகிராம் சமூக வலைத்தளம் மூலமாக ரவிக்குமார் என்ற வாலிபரின் பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் இவர்களது பழக்கம் நட்பாக மாறிய நிலையில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அவசர பணத் தேவைக் காரணம் கூறி ஸ்ருஜனாவிடம் இருந்து ரவிக்குமார் தங்கச் சங்கிலியை வாங்கிச் சென்றுள்ளார்.
அதன்பின்னர், தன் தங்கச் சங்கிலியைத் திருப்பித் தருமாறு ஸ்ருஜனா தொடர்ந்து ரவிக்குமாரிடம் போன் செய்து கேட்டு வந்துள்ளார். கடந்த 29-ம் தேதி ஸ்ருஜனாவைத் தொடர்பு கொண்ட ரவிக்குமார், நகையைத் திருப்பித் தருவதாகக் கூறி ஐதராபாத் வருமாறு அழைத்துள்ளார். இதையடுத்து, மியாபூர் ஹபீஸ் பேட்டையில் உள்ள விடுதியில் அறை எடுத்து தங்கியிருந்த ரவிக்குமாரைச் சந்திக்க கடந்த 30-ம் தேதி ஸ்ருஜனா அங்கு சென்றுள்ளார். அப்போது தங்கச் சங்கிலியைக் கேட்டபோது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
வாக்குவாதம் முற்றியதில், ஆத்திரமடைந்த ரவிக்குமார் ஸ்ருஜனாவைக் கட்டிலில் தள்ளி, தலையணையால் முகத்தை அமுக்கி மூச்சுத்திணறச் செய்து கொலை செய்துள்ளார். பின்னர் உடலை அறையிலேயே பூட்டிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். வெளியே சென்ற ஸ்ருஜனா மீண்டும் திரும்பாத்தால் சந்தேகமடைந்த அவரது நண்பர்கள் போன் செய்தபோது பதில் வரவில்லை. இதுகுறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் அறையைத் திறந்து பார்த்தபோது ஸ்ருஜனா பிணமாகக் கிடந்துள்ளார். தற்போது சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டுள்ள ரவிக்குமாரின் செல்போன் எண் மற்றும் கண்காணிப்பு கேமரா காட்சிகளை வைத்து தலைமறைவாக உள்ள ரவிக்குமாரை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
