CRIME
அங்கிதா பண்டாரி வழக்கில் திடீர் திருப்பம்..! 4,000 பக்க ஆதாரங்களுடன் பகீர் கிளப்பிய குற்றவாளியின் தந்தை.. திடுக்கிடும் பின்னணி..!!
உத்தரகாண்ட் மாநிலத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய அங்கிதா பண்டாரி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் முக்கியக் குற்றவாளி புல்கித் ஆர்யாவின் தந்தை வினோத் ஆர்யா, “அரசியல் அழுத்தம்” காரணமாகத் தன் மகன் மீது பொய்யாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். தனது மகனின் வழக்கறிஞர் அனுஜ் புண்டீருடன் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், அங்கிதா கொலை செய்யப்படவில்லை என்றும், மாறாக அவரது பெற்றோர் மற்றும் ஆண் நண்பர் புஷ்ப் ஆகியோரின் கடுமையான துன்புறுத்தலால் தற்கொலைக்குத் தள்ளப்பட்டார் என்றும் பகீர் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். இதற்கு ஆதாரமாக அங்கிதாவுக்கும் அவரது ஆண் நண்பருக்கும் இடையேயான 4,000 பக்கங்களுக்கும் மேற்பட்ட உரையாடல்கள் தன்னிடம் இருப்பதாகவும், அதில் அங்கிதா தன் பெற்றோர் தன்னைத் தாக்குவதாகவும், நண்பர் தன்னை வற்புறுத்தி மிரட்டுவதாகவும் குறிப்பிட்டுள்ளதாக வினோத் ஆர்யா கூறினார். மேலும், தனது ரிசார்ட் புல்டோசர் மூலம் இடிக்கப்பட்டு தீ வைக்கப்பட்டதில் ₹50 கோடி இழப்பு ஏற்பட்டதாகவும், அரசியல் அழுத்தம் காரணமாக இதுவரை தன் புகார்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் அவர் வேதனை தெரிவித்தார்.
இதனிடையே, புல்கித் ஆர்யாவின் வழக்கறிஞர் அனுஜ் புண்டீர் காவல்துறையின் விசாரணை முறையையும், நிகழ்வுகளின் வரிசையையும் கடுமையாகக் கேள்விக்குள்ளாக்கியுள்ளார். புல்கித்திடம் வாக்குமூலம் பெற்றுச் சிறைக்கு அனுப்பிய இரண்டு நாட்களுக்குப் பிறகே கால்வாயில் இருந்து அங்கிதாவின் உடல் மீட்கப்பட்டதாகவும், காவல்துறை வாகனத்தில் சடலத்தைக் கொண்டு வந்து கால்வாயில் போட்டுக் கதை ஜோடிக்கப்பட்டதாகவும் அவர் குற்றம் சாட்டினார். மேலும், சடலம் பிபிஇ கிட் உடன் கண்டெடுக்கப்பட்டதும், புல்கித் ஆர்யாவின் செல்போன் மற்றும் சிம் கார்டு இதுவரை மீட்கப்படாததும் பல சந்தேகங்களை எழுப்புவதாக அவர் குறிப்பிட்டார். கடந்த 2022 செப்டம்பரில் ரிஷிகேஷ் அருகே உள்ள வந்தாரா ரிசார்ட்டில் 19 வயது வரவேற்பாளர் அங்கிதா பண்டாரி கொலை செய்யப்பட்ட வழக்கில் புல்கித் ஆர்யா, சௌரப் பாஸ்கர், அங்கித் குப்தா ஆகிய மூவருக்கும் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
தற்போது இந்த வழக்கில் ‘விஐபி’ நபர்களின் தொடர்பு இருப்பதாகக் கூறப்படும் விவகாரம் குறித்து சிபிஐ விசாரித்து வரும் நிலையில், இந்த முழு வழக்கையும் பாரபட்சமின்றி மீண்டும் சுதந்திரமாக சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று வினோத் ஆர்யா மற்றும் அவரது வழக்கறிஞர் கோரிக்கை விடுத்துள்ளனர். கடந்த மூன்று ஆண்டுகளாக அதிகாரிகள் தங்கள் தரப்பு வாதங்களைப் புறக்கணித்து வருவதாகவும், உயர் நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருந்தபோதே முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி வெளியிட்ட அறிக்கை நியாயமான விசாரணைக்குப் பாதிப்பை ஏற்படுத்தியதாகவும் அவர்கள் குற்றம் சாட்டினர். அங்கிதாவைத் துன்புறுத்தியதாகக் கூறப்படும் உண்மையான குற்றவாளிகள் அனைவர் மீதும் கடும் நடவடிக்கை எடுத்து, தங்கள் குடும்பத்திற்கும் உரிய நீதி வழங்க வேண்டும் என்று வினோத் ஆர்யா வலியுறுத்தியுள்ளார்.
