LATEST NEWS
“போக்சோ சட்டத்தில் வராது..!” மாணவிகளை ஆசிரியர் அடிப்பது குறித்து உச்ச நீதிமன்றம் வழங்கிய அதிரடித் தீர்ப்பு..!!!
வகுப்பில் பாடங்களை முடிக்காததற்காக பாலியல் நோக்கம் இன்றி, மாணவிகளுக்கு ஆசிரியர் அளிக்கும் உடல் ரீதியான தண்டனைகள் போக்சோ சட்டத்தின் கீழ் குற்றமாகாது என உச்ச நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பளித்துள்ளது. மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த ஆசிரியர் பாஸ்கர் பால் என்பவர் மீது, கடந்த 2025-ஆம் ஆண்டு மாணவிகள் இருவர் கொடுத்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் உஜ்ஜுல் புயான் மற்றும் அதுல் எஸ். சந்துர்கர் ஆகியோர் அடங்கிய அமர்வு, மாணவிகள் பாடங்களை முடிக்காததால் அவர்களின் முதுகில் அடிப்பது அல்லது கையைப் பிடிப்பது போன்ற ஆசிரியரின் செயல்களில் பாலியல் வன்கொடுமை நோக்கம் இல்லை எனக் கூறி அவர் மீதான வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டது.
ஆசிரியர்கள் மீது இத்தகைய கடுமையான பாலியல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்படுவது அவர்களது வாழ்க்கை மற்றும் பணிக்கே மரண அடி போன்றது என்று நீதிபதிகள் தங்களது தீர்ப்பில் கவலை தெரிவித்துள்ளனர். போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுப் பின்னர் அவர் நிரபராதி என விடுவிக்கப்பட்டாலும், அதனால் ஏற்படும் சமூகப் பாதிப்பை மாற்ற இயலாது என்றும் அவர்கள் சுட்டிக்காட்டினர். சிறு வயதுக் குழந்தைகளைக் கையாளும்போது ஆசிரியர்கள் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்திய நீதிபதிகள், போக்சோ சட்டத்தின் கீழ் ஒரு குற்றச்சாட்டைச் சுமத்த அதில் பாலியல் நோக்கம் இருப்பது கட்டாயம் என்றும், பாலியல் நோக்கம் இல்லாத முறையற்ற தண்டனைகள் போக்சோ சட்ட வரம்பிற்குள் வராது என்றும் சட்டப்பிரிவு 7-ஐ சுட்டிக்காட்டி தெளிவுபடுத்தியுள்ளனர்.
