LATEST NEWS
“அந்த மனசுதான் கடவுள்!” படித்தவர்களுக்கே பாடம் புகட்டும் தாத்தா… கைம்மாறு கருதாமல் தினமும் 2 கி.மீ கூட்டிப் பெருக்கும் 80 வயது மனிதரின் வைரல் கதை..!!
மேற்கு வங்க மாநிலம் பன்குரா பகுதியைச் சேர்ந்த 80 வயதான அசோக் தாதா என்ற முதியவர், தனது 10 வயது முதல் கடந்த 70 ஆண்டுகளாக எந்தவொரு கைம்மாறும் எதிர்பாராமல் தினமும் கிராமத்துச் சாலைகளைத் தூய்மைப்படுத்தி வரும் நெகிழ்ச்சியான செய்தி சமூக வலைதளங்களில் பலரது பாராட்டுகளைப் பெற்று வருகிறது. குடும்ப ஏழ்மை காரணமாக 4-ஆம் வகுப்போடு பள்ளிப் படிப்பை நிறுத்திய இவர், தனது 10 வயதில் கையில் விளக்குமாற்றை எடுத்துத் தொடங்கிய இந்தத் தூய்மைப் பணி, இன்று வரை அவரது வாழ்வின் பிரிக்க முடியாத ஒரு பழக்கமாகவே மாறிவிட்டது.
யாரிடமும் பணத்தையோ அல்லது உணவையோ எதிர்பார்க்காமல், தினமும் அதிகாலையில் எழுந்து தனது கிராமத்தைச் சுற்றியுள்ள சுமார் 2 கிலோமீட்டர் தூரச் சாலைகளை அசோக் தாதா நாள் தவறாமல் கூட்டிப் பெருக்கி வருகிறார். ஆரம்பத்தில் இவரை ஒரு வினோதமான மனிதராகப் பார்த்த ஊர் மக்கள், காலப்போக்கில் இவரது சமூக அக்கறையைப் புரிந்து கொண்டனர். நாளின் மற்ற நேரங்களில் தினக்கூலி வேலைகளைச் செய்து, தற்போதும் தனது மனைவியுடன் சேர்ந்து மாதத்திற்கு வெறும் ₹3,000 வருமானத்தில் மிகவும் எளிமையான வாழ்க்கையை அவர் நடத்தி வருகிறார்.
சில வருடங்களுக்கு முன்பு இவருக்குக் கடுமையான உடல்நலக்குறைவு ஏற்பட்டு மரணத்தின் விளிம்பு வரை சென்று மீண்ட போதிலும், குணமடைந்த உடனே தனது தூய்மைச் சேவையை அவர் கைவிடாமல் மீண்டும் தொடர்ந்துள்ளார். படித்த மேதைகள் கூடப் பொது இடங்களில் குப்பைகளைக் கொட்டும் இந்த நவீனக் காலத்தில், மக்கள் நடந்து செல்ல ஒரு சுத்தமான பாதையை உருவாக்க வேண்டும் என்ற அசோக் தாதாவின் இந்தத் தன்னலமற்ற உழைப்பு, உண்மையான சமூக சேவைக்கு மிகச் சிறந்த இலக்கணமாகவும் இளைய தலைமுறைக்கு ஒரு மாபெரும் விழிப்புணர்வாகவும் அமைந்துள்ளது.
