LATEST NEWS
“முதலமைச்சர் வந்துவிட்டார்… முதலீடுகள் எப்போது வரும்?” – முதல்வர் விஜய்யின் லண்டன் பயணத்தை விமரசித்து டி.டி.வி.தினகரன் அடுக்கடுக்கான கேள்வி..!!
தமிழக முதலமைச்சர் விஜய்யின் அரசுமுறை வெளிநாட்டுப் பயணம், முதலீடுகளை ஈர்ப்பதற்கா அல்லது ரசிகர்களைச் சந்தித்து ‘ரீல்ஸ்’ எடுப்பதற்கா என்று அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் காரசாரமாகக் கேள்வி எழுப்பியுள்ளார். மக்கள் வரிப்பணத்தில் மேற்கொள்ளப்பட்ட இந்த 6 நாள் பயணத்தில் கிடைத்துள்ள உண்மையான பயன்கள் என்ன என்பது குறித்து தமிழக அரசு உடனடியாக வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள காரசார அறிக்கையில், கடந்த 10-ஆம் தேதி லண்டன் சென்ற முதலமைச்சர் விஜய், அங்கு 14-ஆம் தேதி ஒரே ஒரு நாள் மட்டுமே முதலீட்டாளர்களைச் சந்தித்ததாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள நாட்களில் மோட்டார் வாகன பந்தயத்தை கொடியசைத்துத் தொடங்குவது, ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொள்வது என நேரத்தைக் கழித்திருப்பது வேதனையளிப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். மேலும், உத்தரப் பிரதேசத்தை தலைமையிடமாகக் கொண்ட நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்ய லண்டன் வரை செல்ல வேண்டிய அவசியம் என்ன என்றும், ஒப்பந்தம் செய்யவிருக்கும் ஐரோப்பிய நிறுவனத்தின் பெயரைக் கூட வெளிப்படையாக அறிவிக்காதது பல சந்தேகங்களை எழுப்புவதாகவும் சாடியுள்ளார்.
தற்போது தமிழகத்தில் சட்டம் – ஒழுங்கு சீர்கேடு, போதைப்பொருள் புழக்கம், ஆவின் பால் தட்டுப்பாடு, தொடர் மின்வெட்டு, நெல் மூட்டைகள் பாழாவது மற்றும் விவசாயிகளின் போராட்டங்கள் என மாநிலமே பல்வேறு நெருக்கடிகளில் சிக்கித் தவிக்கிறது. அதோடு, அண்ணா மற்றும் பெரியார் பிறந்தநாளை முன்னிட்டு தொடங்கப்பட வேண்டிய முக்கிய அரசு நலத்திட்ட விழாக்களையும் ஒத்திவைத்துவிட்டு முதலமைச்சர் வெளிநாடு சென்றது எவ்விதத்தில் நியாயம் என்று கேள்வி எழுப்பியுள்ள தினகரன், மக்கள் பிரச்சினைகளைத் திசைதிருப்ப அரசு முயன்றால் அதன் எதிர்வினை தீவிரமாக இருக்கும் என எச்சரித்துள்ளார்.
எனவே, எதற்கெடுத்தாலும் வெள்ளை அறிக்கை கேட்கும் தவெக அரசு, இந்த லண்டன் பயணத்தின் மூலம் கையெழுத்தான ஒப்பந்தங்கள், வரவிருக்கும் முதலீடுகள் மற்றும் உருவாக்கப்பட உள்ள வேலைவாய்ப்புகள் பற்றிய முழுமையான விவரங்களை நாள் வாரியாக பட்டியலிட்டு வெள்ளை அறிக்கையாக வெளியிட வேண்டும் என அதிரடியாக வலியுறுத்தியுள்ளார்.
