LATEST NEWS
டேய் யாருடா நீங்க..? காதல் திருமணம் செய்த இளம்பெண்ணை தூக்கிய கூலிப்படை… மின்னல் வேகத்தில் பாய்ந்த காரால் 6 பேர் படுகாயம்… விரட்டிப்பிடித்து தாக்கிய பொதுமக்கள் ..!!
குடும்பத்தினரின் எதிர்ப்பை மீறி காதல் திருமணம் செய்து பெங்களூருவில் குடியேறிய ராஜஸ்தான் இளம்பெண்ணை, அவரது குடும்பத்தினர் ஏவிய கும்பல் வீடுபுகுந்து கடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சினிமா காட்சிகளையும் விஞ்சும் வகையில் நகரின் நடுவே அதிவேகமாக இயக்கப்பட்ட கடத்தல் கார், சாலையில் சென்ற வாகனங்கள் மீது மோதி விபத்துக்குள்ளானதில் 6 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
ராஜஸ்தானைச் சேர்ந்த பூஜா (21) என்ற பெண், தனது காதலன் ஓம் பிரகாஷ் (23) என்பவரை 9 மாதங்களுக்கு முன்பு பெற்றோரின் விருப்பத்திற்கு மாறாக திருமணம் செய்துகொண்டார். குடும்பத்தின் அச்சுறுத்தலுக்கு பயந்து தம்பதியினர் பெங்களூருவின் கிரகாரா தசராஹள்ளி பகுதியில் ரகசியமாக வசித்து வந்தனர். ஆனால், பூஜா தனது அத்தையுடன் தொலைபேசியில் பேசியதை வைத்து அவரது இருப்பிடத்தைக் கண்டறிந்த குடும்பத்தினர், அவரைத் தூக்கி வர ராஜஸ்தானில் இருந்து 4 பேர் கொண்ட கூலிப்படையை ஏவியுள்ளனர்.
திட்டமிட்டபடி பெங்களூரு வந்தடைந்த அந்த கும்பல், பூஜாவின் வீட்டிற்குள் புகுந்து அவரை வலுக்கட்டாயமாக கடத்தி ஹூண்டாய் வென்யூ காரில் ஏற்றி தப்பிக்க முயன்றது. கார் அதிவேகமாகச் சென்றபோது பயத்தில் பூஜா கதறித் துடித்ததால், காரை ஓட்டிய சத்தாம் என்ற நபர் பதற்றத்தில் கண்மூடித்தனமாக வாகனத்தை ஓட்டியுள்ளார். இதில் சாலையில் சென்ற 3 முதல் 4 இருசக்கர வாகனங்கள் மீது கார் பயங்கரமாக மோதியதில், சிறுவர்கள் மற்றும் பெண்கள் உட்பட 6 பேர் படுகாயமடைந்தனர். இதில் ஜெயலட்சுமி (57) என்ற பெண் பலத்த தலைக் காயமடைந்து தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
விபத்தைக் கண்டு கொதித்தெழுந்த பொதுமக்கள், கடத்தல் காரை விரட்டிப் பிடித்து அதில் இருந்தவர்களை மடக்கிப் பிடித்தனர். தப்பியோட முயன்ற கடத்தல்காரர்களை பொதுமக்கள் தர்மஅடி கொடுத்து காவல்துறையிடம் ஒப்படைத்தனர். இச்சம்பவம் தொடர்பாக ராஜஸ்தானைச் சேர்ந்த ராகேஷ் (31), கரண் (25) மற்றும் அயான் (18) ஆகிய மூவரைப் போலீசார் கைது செய்துள்ளனர். காரை ஓட்டி தப்பி ஓடிய முதன்மை குற்றவாளியான சத்தாமை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர். பட்டப்பகலில் நகரின் மையப்பகுதியில் நடந்த இந்த சினிமா பாணி கடத்தல் சம்பவம் பெங்களூரு மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
