LATEST NEWS
நடுவானில் பதறவைத்த சம்பவம்..! இஸ்ரேல் விமானத்தைக் கடத்த முயன்ற துணை விமானி… பின்னணியில் வெளிவந்த அதிர்ச்சித் தகவல்..!!
ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாயில் இருந்து கடந்த 30-ந்தேதி இஸ்ரேலுக்கு சென்ற, பிளைதுபாய் நிறுவனத்தின் பயணிகள் விமானத்தை இயக்கிய அதன் துணை விமானி கடத்த முயன்றார். விமானத்தை இயக்கிய இந்திய விமானி சுமித் மச்சாரை, விமானி அறையில் உள்ள விபத்துக்கால கோடாரியால் துணை விமானி தாக்கினார். ஆனால் சுமித் மச்சார் கடுமையாக போராடி, விமான கடத்தலை தடுத்தார். பின்னர் துணை விமானியை பயணிகள் மடக்கி பிடித்தனர். இதையடுத்து மாற்று விமானிகள் மூலம் விமானம் சவுதி அரேபியாவில் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டது. சவுதி அரேபியா கைது செய்த துணை விமானியை நேற்று ஐக்கிய அரபு அமீரகத்திடம் ஒப்படைத்தது. அவரிடம் சிறப்பு புலனாய்வு குழுவினர் விசாரணை நடத்தி வரும் நிலையில், இந்த சம்பவம் திட்டமிட்ட பயங்கரவாத செயல் என்று ஐக்கிய அரபு அமீரகம் அறிவித்துள்ளது.
விமானத்தை கடத்த முயன்ற துணை விமானியின் பெயர் ஹமாம் அல் ஹமாமி (29) என்பது தெரியவந்துள்ளது. ஓமன் நாட்டு குடிமகனான இவர், ஐக்கிய அரபு அமீரகத்தில் ஒரு ஓமன் தந்தைக்கும் சிரிய தாய்க்கும் பிறந்தவர் ஆவார். இங்கிலாந்தில் விமான போக்குவரத்து மேலாண்மை பயின்ற இவர், ஓமனின் தேசிய விமான நிறுவனமான ஓமன் ஏரில் இணை விமானி பயிற்சியாளராக பணியில் சேர்ந்தார். கடந்த 2024-ம் ஆண்டு அவரிடம் பயங்கரவாத சிந்தனையை தூண்டும் பொருட்கள் இருப்பது கண்டறியப்பட்டதால், அவரை விமானம் இயக்க ஓமன் தடை விதித்தது. அதன்பின் ராயல் ஏர் மரோக்கில் பணியாற்றி, கடந்த 8 மாதங்களுக்கு முன்புதான் பிளைதுபாய் நிறுவனத்தில் சேர்ந்துள்ளார். தடை விதிக்கப்பட்ட ஒருவரை பிளைதுபாய் விமான நிறுவனம் எவ்வாறு பணியில் சேர்த்தது என்பது குறித்து சிறப்பு புலனாய்வு குழு தீவிர விசாரணை நடத்தி வருகிறது.
ஹமாம் அல் ஹமாமி தனது வாழ்க்கையின் பெரும்பகுதியை ஓமனுக்கு வெளியே, குறிப்பாக சிரியாவில் கழித்துள்ளார். அங்கு அவர் பயங்கரவாத கருத்துகளால் ஈர்க்கப்பட்டதாக கூறப்படுகிறது. அவரது சமூக ஊடக பக்கங்களில் அல் கொய்தா அமைப்பின் முன்னாள் தலைவர்களான ஐமன் அல் ஜவாஹிரி மற்றும் தற்கொலைப்படை தாக்குதலை நடத்திய ஹுமாம் கலீல் அபு முலால் அல் பலாவியின் புகைப்படங்கள் இடம் பெற்றிருந்தன. மேலும், இவர் இந்த விமானத்தை கடத்திச் சென்று இஸ்ரேலில் மோதச் செய்ய திட்டமிட்டிருந்தார் என்ற அதிர்ச்சி தகவலும் வெளியாகியுள்ளது.
