LATEST NEWS
“அவர் ஒரு ஹீரோ.. சினிமா கதையை மிஞ்சிய நிஜ சம்பவம்.. 15,000 அடி உயரத்தில் நடந்த மரண போராட்டம்…! 180 பயணிகளின் உயிரைக் காப்பாற்றிய இந்திய பைலட்டை பாராட்டி தள்ளிய ட்ரம்ப்..!!
இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவை நோக்கி 180 பயணிகளுடன் புறப்பட்ட போயிங் 737 மேக்ஸ் 8 பயணிகள் விமானத்தில் நடுவானில் அசாதாரண சூழல் ஏற்பட்டது. விமானம் தாழ்வாக பறந்ததைத் தொடர்ந்து விமான கடத்தல் எச்சரிக்கை (ஸ்குவாக் 7500) விடுக்கப்பட்டது. இதையடுத்து ஜோர்டன் வான்வெளியில் இருந்து திரும்பிய விமானம், சவுதி அரேபியாவின் தபூக் விமான நிலையத்தில் பத்திரமாக தரையிறக்கப்பட்டது. விமானத்தில் இருந்த இந்திய கேப்டன் ஸ்மித் மச்சார், விமானத்தை கடத்த முயன்ற ஓமன் நாட்டு துணை விமானியுடன் துணிச்சலாக போராடினார். அப்போது இரும்பு ஆயுதத்தால் தாக்கப்பட்டு ரத்த வெள்ளத்தில் சரிந்த நிலையிலும், 180 பயணிகளின் உயிரைக் காப்பாற்றினார்.
இந்த விவகாரத்தில் துணிச்சலாக செயல்பட்ட இந்திய விமானி ஸ்மித் மச்சாரை அமெரிக்க அதிபர் டிரம்ப் பாராட்டி, அவரை ஒரு “ஹீரோ” என புகழ்ந்துள்ளார். வெள்ளை மாளிகையின் ஓவல் அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு தன்னிடம் இந்தத் தகவல்களைப் பகிர்ந்துகொண்டதாகக் கூறினார். “அந்த விமானி மிகவும் மோசமான நிலையில் இருந்தார். ஆனால், அந்தச் சூழலிலும் அவர் செயல்பட்ட விதம் ஆச்சரியமாக இருந்தது; ஒரு வகையில் அவர் ஒரு ஹீரோதான்” என்று நேதன்யாகுவுடனான உரையாடலை நினைவுகூர்ந்து டிரம்ப் தெரிவித்தார்.
மேலும் சம்பவத்தை விவரித்த டிரம்ப், விமானி காக்பிட் கதவைத் திறந்து உதவிக்காகக் கத்தியதாகவும், துணை விமானி அவரைத் தாக்கியதாகவும் கூறினார். அப்போது காக்பிட்டிற்குள் நுழைந்த ஒரு இஸ்ரேலிய பயணி, துணை விமானியை அடக்க உதவியதாகத் தெரிவித்தார். ‘ஏர் டிசாஸ்டர்ஸ்’ என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியைப் பார்த்து விமானம் ஓட்டும் முறையை ஓரளவு கற்றுக் கொண்ட அந்த பயணி, துணை விமானியை இருக்கையிலிருந்து வெளியே இழுத்து வீசி மற்ற பயணிகள் உதவியுடன் அவரைக் கட்டுப்படுத்தினார் என்றும் டிரம்ப் குறிப்பிட்டார்.
