CRIME
“மனித உயிரைக் காக்கும் ரத்தத்திலும் சாதியா..?” அரசு கலைக் கல்லூரியில் நடந்த பகீர் காரியம்.. அதிகாரிகளை கதறவிட்ட மாணவர்கள்.. உதகையில் பரபரப்பு..!!
நீலகிரி மாவட்டம் உதகை அரசு கலைக் கல்லூரியில் நடைபெற்ற ரத்த தான முகாமில், ரத்தம் வழங்கிய மாணவர்களிடம் சாதி விவரங்கள் கேட்கப்பட்ட சம்பவம் ஒட்டுமொத்த தமிழகத்திலும் பெரும் அதிர்ச்சியையும் சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது. மத்திய அரசின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் ‘மேரா யுவ பாரத்’ அமைப்பு இந்த முகாமிற்கு ஏற்பாடு செய்திருந்தது. இதில் ரத்த தானம் செய்ய வந்த மாணவர்களின் பெயர், வயது, படிப்பு மற்றும் தொலைபேசி எண் போன்ற பொதுவான விபரங்களைச் சேகரித்ததோடு, அவர்களின் சாதி விவரங்களையும் படிவத்தில் நிரப்பக் கோரியதாகக் கூறப்படுகிறது; இதனால் அதிர்ச்சியடைந்த மாணவர்கள், மனித உயிரைக் காக்கும் ரத்தத்திற்குள் சாதியைப் புகுத்துவது ஏன் என அங்கிருந்த அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
“சாதி பார்த்துதான் ரத்தம் பெறுவீர்களா?” என்று கல்லூரி மாணவர்கள் ஆவேசத்துடன் கேள்வி எழுப்பியதைத் தொடர்ந்து இந்த விவகாரம் சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாகப் பரவி, நெட்டிசன்கள் மற்றும் சமூக ஆர்வலர்களிடையே கடும் கண்டனங்களை எழுப்பியுள்ளது. அவசரக் காலத்தில் உயிரைக் காக்கும் ரத்த தானத்தில் சாதியைப் பாகுபடுத்திப் பார்ப்பது மனிதநேயமற்ற செயல் என்றும், முற்போக்குச் சிந்தனை கொண்ட தமிழகக் கல்வி வளாகத்திற்குள் இத்தகைய செயல்பாடுகள் முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும் என்றும் பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர். இந்த விவகாரம் தொடர்பாகத் தற்போதைய நிலவரப்படி, கல்லூரி நிர்வாகம் மற்றும் முகாம் நடத்திய அதிகாரிகள் தரப்பில் முறையான விளக்கங்கள் கோரப்பட்டுள்ளன.
