LATEST NEWS
அடக்கொடுமையே..! மாட்டை தேடிச்சென்ற கணவன்… எமனாய் உயிரைப் பறித்த மின்வேலி… காப்பாற்றச் சென்ற மனைவி உட்பட 3 பேர் துடிதுடித்து மரணம்..!!
பீகார் மாநிலம் சீதாமஹி மாவட்டம் பைர்கனியா பகுதியில், வயலில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டிருந்த மின்வேலியில் சிக்கி கணவன், மனைவி உட்பட மூன்று கிராமவாசிகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். அக்தா பஸ்சிமி சக்வா பஞ்சாயத்துக்கு உட்பட்ட தக்கியா தோலா கிராமத்தில் இந்த சோகமான சம்பவம் சனிக்கிழமை அதிகாலை அரங்கேறியுள்ளது. நெல் பயிர்களை காட்டுப்பன்றிகளிடமிருந்து பாதுகாப்பதற்காக விவசாயி ஒருவர் வயலைச் சுற்றி இரும்பு கம்பிகளால் மின்வேலி அமைத்ததே இந்த விபரீதத்திற்கு காரணமாக மாறியுள்ளது.
அதிகாலை நேரத்தில் தங்களது எருமை மாடு கயிற்றை அவிழ்த்துக்கொண்டு ஓடியதால், அதைத் தேடி முகமது இஸ்லாம் மன்சூரி என்பவர் வயல்வெளிப் பகுதிக்குச் சென்றுள்ளார். அப்போது இருட்டில் வயலில் பாய்ந்து கொண்டிருந்த மின்சாரக் கம்பியை மிதித்த அவர், சம்பவ இடத்திலேயே தூக்கி வீசப்பட்டு உயிரிழந்தார். நீண்ட நேரமாகியும் கணவர் வீடு திரும்பாததால் தேடிச் சென்ற அவரது மனைவி ருபைதா காதுன், கணவர் கீழே கிடப்பதைக் கண்டு பதறிப்போய் அவரைத் தொட முயன்றபோது அவரும் மின்சாரம் தாக்கி பலியானார். இவர்களைக் காப்பாற்ற முயன்ற அஸ்மத் அலி என்ற மற்றொரு கிராமவாசியும் அதே மின்வேலியில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த கொடூர விபத்தில் இவர்களைக் காப்பாற்ற முயன்ற சைப் அலி என்ற மற்றொரு இளைஞர் பலத்த தீக்காயங்களுடன் மீட்கப்பட்டு, சீதாமஹி சதர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவ இடத்தில் மூன்று மனித உடல்களுடன் இரண்டு காட்டுப்பன்றிகளும் இறந்து கிடந்ததை போலீசார் கண்டறிந்துள்ளனர். இந்த விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள பைர்கனியா போலீசார், சட்டவிரோதமாக மின்வேலி அமைத்த விவசாயி மீது கடுமையான நடவடிக்கை எடுக்க விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.
