LATEST NEWS
“சாமானிய மக்களுக்கு ஒரு சட்டம்.. அமைச்சருக்கு ஒரு சட்டமா..?” புலியை நோக்கி ஓடி ரீல்ஸ் எடுத்த அமைச்சர் வன்னியரசு.. கொந்தளித்த டிடிவி தினகரன் சரமாரி கேள்வி..!!
நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பக வனப்பகுதிக்குள், அமைச்சர் வன்னியரசு பதிவிட்ட ட்ரெக்கிங் வீடியோவால் பெரும் சர்ச்சை எழுந்துள்ளது. கடந்த 10-ம் தேதி முதுமலைக்கு வந்த அமைச்சர் வன்னியரசு புலியை நோக்கி ஓடியது மற்றும் வனத்துறை வாகனத்தின் மீது அமர்ந்திருந்தது போன்ற வீடியோக்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். சுற்றுலாப் பயணிகளுக்கும் உள்ளூர் மக்களுக்கும் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில், அமைச்சருக்கு மட்டும் வனப்பகுதிக்குள் எப்படி அனுமதி வழங்கப்பட்டது என்ற கேள்வி தற்போது வெடித்துள்ளது.
இது குறித்து அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், முதுமலை வனப்பகுதிக்குள் புலியை விரட்டியதோடு, வனத்துறை வாகனத்தின் மீது அமர்ந்து வீடியோ எடுத்து அதனை ரீல்ஸாகப் பதிவிட்டுள்ள சமூகநீதித் துறை அமைச்சர் வன்னியரசின் செயல் சமூகநீதிப் போராளிகளுக்குப் பெருத்த அவமானத்தை ஏற்படுத்தியுள்ளதாகத் தெரிவித்துள்ளார். வனத்துறைக்கும் வனப்பகுதிகளுக்கும் நேரடித் தொடர்பில்லாத அமைச்சர் வன்னியரசு, வனத்துறை அதிகாரிகள் படைசூழ வனப்பகுதிக்குள் எவ்வாறு வலம் வந்தார் என்றும், வனவிலங்குகளை அச்சுறுத்தும் செயல்களில் அவர் ஈடுபடுவதற்கு வனத்துறை அதிகாரிகள் அனுமதித்தது பல்வேறு சர்ச்சைகளுக்கு வழிவகுத்துள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தவெக ஆட்சியில் ஆளுங்கட்சியினர் முதல் முதல்-அமைச்சர் வரை அனைவரும் ரீல்ஸ் மோகத்தில் மூழ்கித் திளைத்துக் கொண்டிருக்கும் நிலையில், ஆட்சியில் பங்கெடுத்துள்ள விசிக அமைச்சரும் வனவிலங்குகளின் இயல்பான அமைதியையும் பாதுகாப்பையும் கேள்விக்குறியாக்கும் செயல்களில் இறங்கிவிட்டாரோ என்ற சந்தேகம் எழுவதாகவும் டிடிவி தினகரன் கூறியுள்ளார். அமைச்சராக இருந்தால் வனவிலங்குகளை விரட்டுவதற்கும் அத்துமீறி நுழைவதற்கும் சிறப்புச் சட்ட விலக்கு உள்ளதா, வனவிலங்கு பாதுகாப்புச் சட்டம் அமைச்சர் மீதும் பாயுமா போன்ற அடுக்கடுக்கான கேள்விகள் எழுந்துள்ள நிலையில், இந்த விவகாரம் குறித்து உரிய விசாரணை நடத்தி விதிமீறல்கள் உறுதி செய்யப்பட்டால் அமைச்சர் மற்றும் இதற்குத் துணைபோன வனத்துறை அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் முதல்-அமைச்சரை வலியுறுத்தியுள்ளார்.
