LATEST NEWS
“தவெக-வும் பாலியல் குற்றங்களும்” ஒரு புத்தகமே எழுதலாம் போலயே… முதல்வர் விஜய்க்கு டிடிவி தினகரன் கொடுத்த அதிர்ச்சி வைத்தியம்..!!
“தவெக-வும் பாலியல் குற்றங்களும்” என்ற தலைப்பில் புத்தகமே எழுதலாம் என்ற அளவிற்கு நாள்தோறும் பாலியல் குற்றச்சம்பவங்கள் நடைபெற்று வருவதாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கடுமையாகக் குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி மற்றும் கோவை மாவட்டம் காரமடை ஆகிய பகுதிகளில் தவெக நிர்வாகிகள் மீது சொந்தக் கட்சியின் பெண் நிர்வாகிகளே பாலியல் புகார்களை முன்வைத்திருப்பதைச் சுட்டிக்காட்டியுள்ளார். பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு ‘நோ காம்ப்ரமைஸ்’ என்று கூறிய முதலமைச்சர் விஜய், தற்போது குற்றம் சாட்டப்பட்டவர்கள் தனது கட்சியினர் என்பதால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ‘ஆல் இஸ் வெல்’ (All Is Well) சொல்வாரா என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
தவெக சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகள் மீது எழும் பாலியல் அத்துமீறல் புகார்களுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்காமல், ஆளுங்கட்சி என்ற மமதையில் முதலமைச்சர் கண்டும் காணாமல் கடந்து செல்வது கடும் கண்டனத்திற்குரியது என டிடிவி தினகரன் சாடியுள்ளார். மேலும், திருப்பூரில் சிறுமி வன்கொடுமை, மதுரையில் 500 பவுன் நகைத் திருட்டு, ஊரக வளர்ச்சித் துறையின் 22 கோடி ரூபாய் டிஜிட்டல் திருட்டு மற்றும் விழுப்புரம், திருவாரூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் அடுத்தடுத்து அரங்கேறும் கொள்ளைச் சம்பவங்களைப் பட்டியலிட்டு, தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீரழிந்துவிட்டதாக அவர் விமர்சித்துள்ளார்.
காவல்துறையின் மெத்தனப்போக்கால் சட்டம் ஒழுங்கு முதலமைச்சரின் கட்டுப்பாட்டில் இருக்கிறதா என்ற கேள்வி எழுந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். எனவே, குற்றச்செயல்களில் ஈடுபடுவோர் சொந்தக் கட்சியினராகவே இருந்தாலும் எவ்விதப் பாரபட்சமுமின்றிக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், சீர்குலைந்துள்ள தமிழகத்தின் சட்டம் ஒழுங்கை உடனடியாகச் சீரமைக்க வேண்டும் என்றும் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.
