LATEST NEWS
ஜெம் வீரமணி வழக்கில் அடுத்த அதிரடி..! முறையாக விசாரிக்காத 3 பெண் காவல் அதிகாரிகளுக்கு கல்தா… அந்த 3 பேர் யார்..? தமிழக அரசு அதிரடி..!!
சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ‘ஜெம்’ கிரானைட் தொழிலதிபர் வீரமணி மீது இதுவரை 8 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் 7 போக்சோ வழக்குகளும், ஒரு சிறுமியைத் தற்கொலைக்குத் தூண்டிய வழக்கும் அடங்கும். இந்த விவகாரத்தில் வீரமணிக்கு உடந்தையாக இருந்த சாந்தி, அவரது கணவர் மகேந்திர சிம்ஹன், மேலாளர் சக்திவேல் உள்ளிட்ட 8 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், சிறப்பு புலனாய்வுக் குழு அனைத்துப் புகார்களையும் விசாரித்து ஆதாரங்களைத் திரட்டி வருகிறது.
இந்த வழக்கை முறையாக விசாரணை நடத்தவில்லை என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில், 3 பெண் காவல் அதிகாரிகளைக் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்து தமிழக உள்துறை செயலகம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி, உதவி ஆணையர்கள் கீதாஞ்சலி, வனிதா மற்றும் துணை ஆணையர் ராஜலட்சுமி ஆகிய மூவரும் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
முன்னதாக, இதே விவகாரத்தில் சென்னை முன்னாள் காவல் ஆணையர் அருண் மற்றும் மத்திய குற்றப்பிரிவின் முன்னாள் கூடுதல் ஆணையர் ராதிகா உள்ளிட்ட 7 காவல்துறை அதிகாரிகள் மீது புதிதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகச் சிறப்பு புலனாய்வுக் குழு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்தத் தொடர் நடவடிக்கைகள் காவல்துறை மற்றும் அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
