CRIME
துரோகத்தின் உச்சம்.. கணவன் பணத்திலேயே கணவனுக்கு எமன்.. 3 வருட கள்ளக்காதலுக்காக மனைவி செய்த கொடூரச் செயல்.. கதி கலங்க வைக்கும் பின்னணி..!!
பீகார் மாநிலம் பாட்னா அருகே உள்ள பிஹ்தா பகுதியில், கள்ளக்காதலுக்காகக் கணவனின் வங்கிக் கணக்கிலிருந்த பணத்தையே எடுத்துக் கூலிப்படையை ஏவி மனைவி கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆட்டோ ஓட்டுநரான இர்பான் இமாம் என்பவர் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்ட வழக்கில், அவரது மனைவி பௌஜியா பிர்தௌஸ் மற்றும் அவரது காதலன் கரண் சவுத்ரி ஆகிய இருவரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். பௌஜியாவுக்கும் கரணுக்கும் இடையே கடந்த மூன்று ஆண்டுகளாகத் திருமணத்தை மீறிய உறவு இருந்து வந்துள்ளது. தங்களது உறவுக்கு கணவர் இர்பான் இடையூறாக இருப்பதாகக் கருதிய இருவரும், அவரைத் தீர்த்துக்கட்டத் திட்டமிட்டுள்ளனர்.
இதற்காகக் காதலன் கரண் சவுத்ரி, கூலிப்படையைச் சேர்ந்த நபர் ஒருவரிடம் இர்பானைக் கொலை செய்ய 40,000 ரூபாய் பேரம் பேசி, முன்பணமாக 20,000 ரூபாயை வழங்கியுள்ளார். இதில் மிகவும் அதிர்ச்சியளிக்கும் விஷயம் என்னவென்றால், கணவரைக் கொலை செய்வதற்காகக் கொடுக்கப்பட்ட அந்தப் பணத்தை மனைவி பௌஜியா தனது கணவர் இர்பானின் வங்கிக் கணக்கிலிருந்தே எடுத்துக் கொடுத்துள்ளார் என்பது காவல்துறையின் விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்தக் கொலைச் சம்பவத்தில் தொடர்புடைய மனைவி மற்றும் காதலன் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், தலைமறைவாக உள்ள கூலிப்படை நபரைக் காவல்துறையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
