CRIME
“அடச்சீ நீயெல்லாம் மனுஷனா..?” தூங்கிக் கொண்டிருந்த மனைவி, 3 மகள்களுக்கு நேர்ந்த கொடூரம்.. செங்கலால் தந்தை செய்த வெறிச்செயல்.. நெஞ்சை பதறவைக்கும் பின்னணி..!!
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள கோவிந்தபுரம் பகுதியில், வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த தனது மனைவி மற்றும் மூன்று மகள்களைச் செங்கலால் தலையை நசுக்கிக் கொடூரமாகக் கொலை செய்துவிட்டு கணவன் இரவோடு இரவாகத் தப்பி ஓடியுள்ள துயரச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த மனிதாபிமானமற்ற தாக்குதலில் 40 வயதான கீதாஜா மற்றும் அவரது மகள்களான நந்தினி, கிரிஷா, ராதிகா ஆகிய நால்வரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். உயிரிழந்த மகள்கள் அனைவரும் 17 முதல் 23 வயதுக்குட்பட்ட இளம் பெண்கள் எனத் தெரிவித்துள்ள காவல்துறையினர், குடும்பத்தினர் அனைவரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தபோது ராகுல்ஜா என்ற அந்தக் குடும்பத்தின் தலைவனே செங்கலால் பலமுறை தாக்கி இந்தக் கொடூரத்தை நிகழ்த்தியதாகச் சந்தேகிக்கின்றனர்.
வெள்ளிக்கிழமை காலை 10 மணி வரை அந்த வீட்டில் எந்தவொரு நடமாட்டமும் இல்லாததால் சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் அளித்த தகவலின் பேரில் அங்கு வந்த போலீசார், நால்வரின் உடல்களையும் மீட்டனர். கொலை நடந்த சமயத்தில் ராகுலின் 85 வயது முதிய தந்தையும் அதே வீட்டில்தான் இருந்துள்ளார். சம்பவ இடத்திலிருந்து இரத்த மாதிரிகள் மற்றும் தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்ட செங்கல் ஆகியவற்றைத் தடயவியல் துறையினர் கைப்பற்றியுள்ளனர். குடும்பத் தகராறு காரணமாக இக்கொலை நடந்திருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படும் நிலையில், தப்பியோடிய ராகுல்ஜாவைப் பிடிக்க மேற்குப் பகுதி காவல்துறை துணை ஆணையர் பிரசாந்த் கிரண் தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டுத் தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
