LATEST NEWS
“மக்களுக்குச் செய்யும் பச்சைத் துரோகம்..!” விஜய்யை வெளுத்து வாங்கிய சீமான்… அதிரும் தமிழக அரசியல் களம்..!!!
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், மாநில உரிமைகள் மற்றும் தமிழ்நாட்டு மக்களின் அத்தியாவசியப் பிரச்சனைகளில் தமிழக வெற்றிக் கழகத்தின் அரசு உரிய நடவடிக்கை எடுக்காமல் கள்ளமௌனம் சாதிப்பதாகக் கடுமையாகச் சாடியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், காவிரி நீர்ப் பங்கீடு, மாநிலச் சுயாட்சி மற்றும் எல்லைப் பிரச்சனைகள் போன்ற முக்கிய விவகாரங்களில் தவெக அரசு தெளிவான நிலைப்பாட்டை எடுக்கத் தவறிவிட்டதாகக் குற்றம் சாட்டினார். மக்களுக்கு வாக்குறுதிகளை அள்ளி வீசி ஆட்சிக்கு வந்தவர்கள், மாநில உரிமைப் போராட்டங்களில் குரல் கொடுக்காமல் மெளனம் காப்பது தமிழ்நாட்டு மக்களுக்குச் செய்யும் பச்சைத் துரோகம் என்றும் அவர் கொந்தளிப்புடன் குறிப்பிட்டார்.
மேலும் ஆளுநர் விவகாரம் மற்றும் மத்திய அரசின் கொள்கைகளுக்கு எதிராக அழுத்தம் தருவதில் தவெக அரசு மெத்தனப் போக்கைக் கடைப்பிடிப்பதாகவும், நாடகத்தனமான அரசியலில் ஈடுபட்டு வருவதாகவும் சீமான் சாடினார். மாநிலத்தின் இறையாண்மையையும் தன்னாட்சியையும் காப்பாற்றத் தவறிய அரசு வேடிக்கைப் பார்ப்பது மன்னிக்க முடியாத தவறு எனக் குறிப்பிட்ட அவர், தமிழ் தேசியத்தையும் மாநில உரிமைகளையும் நாம் தமிழர் கட்சி தொடர்ந்து முன்னிறுத்தும் என்றார். சீமானின் இந்த அதிரடித் தாக்குதல் தமிழக அரசியல் வட்டாரத்திலும் சமூக வலைத்தளங்களிலும் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ள நிலையில், இதற்கு தவெக தரப்பிலிருந்து விரைவில் பதில் அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
