CRIME
அடிப்பாவி…! 6 மாதங்களாக தேநீரில் கலக்கப்பட்டது என்ன…? கணவன் செய்த அந்த ஒரு காரியத்தால் அம்பலமான ரகசியம்..!!
உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரின் ராவத்பூர் காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில், தனியார் நிறுவனக் கணக்காளராக பணிபுரியும் ஹிமான்ஷு குப்தா என்பவர், தனது மனைவி ஜோதி குப்தா மீது அதிர்ச்சியளிக்கும் குற்றச்சாட்டைச் சுமத்தியுள்ளார். சௌபேபூரில் உள்ள அரசு மருத்துவமனையில் லேப் டெக்னீஷியனாகப் பணிபுரியும் ஜோதியுடன், கடந்த 2024 ஜனவரி 30 அன்று ஹிமான்ஷுவுக்குத் திருமணம் நடைபெற்றுள்ளது. திருமணமான சில மாதங்களிலேயே குடும்பத்தில் அடிக்கடி தகராறுகள் ஏற்பட்டு வந்த நிலையில், ஹிமான்ஷுவின் பெற்றோருக்கும் பின்னர் அவருக்கும் நெஞ்சு வலி, கடுமையான பலவீனம் மற்றும் ரத்த வாந்தி போன்ற அறிகுறிகளுடன் உடல்நலம் தொடர்ச்சியாகப் பாதிக்கப்பட்டு வந்துள்ளது.
தொடர் உடல்நலக் குறைவால் சந்தேகமடைந்த ஹிமான்ஷுவின் தாய், ஒருநாள் தேநீர் தயாரிக்கும் போது ஜோதி அதில் ஏதோ ஒரு பொருளைக் கலப்பதைக் கண்டு கேட்டுள்ளார். அதற்கு ஜோதி ஏலக்காய் எனக் கூறியதுடன், தானும் அந்தத் தேநீரைக் குடிக்காமல் தவிர்த்துள்ளார். இதனால் சந்தேகம் வலுக்கவே, உண்மை கண்டறிய சமையலறையில் ரகசிய சிசிடிவி கேமராக்களை ஹிமான்ஷு பொருத்தியுள்ளார். அந்த சிசிடிவி காட்சிகளில் ஜோதி பல நாட்களாகத் தேநீரில் ஏதோ ஒரு தெரியாத பொருளைக் கலப்பது பதிவாகியுள்ளது. இந்த ஆதாரங்களை ஜோதியிடம் காட்டி விசாரிக்க முயன்றபோது, அவர் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார்.
இதையடுத்து, சிசிடிவி காட்சிகள் மற்றும் மருத்துவர்களின் பரிசோதனை அறிக்கைகளுடன் ஜூலை 23 அன்று ஹிமான்ஷு காவல் ஆணையரிடம் புகார் அளித்தார். மருத்துவப் பரிசோதனையில் ஏதேனும் ரசாயனப் பொருள் உட்கொண்டதால் இந்த பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம் என மருத்துவர்கள் தெரிவித்ததைத் தொடர்ந்து, ஜூலை 25 அன்று ஜோதி மீது காவல்துறை வழக்குப் பதிவு செய்தது. அதேவேளையில், கணவர் மற்றும் மாமியார் குடும்பத்தினர் மீது வரதட்சணை கொடுமை மற்றும் தாக்குதல் நடத்தியதாக ஜோதியும் எதிர் புகார் அளித்துள்ளார். தற்போது இருதரப்பு புகார்களையும் பெற்றுக்கொண்டு காவல்துறை தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறது.
