CRIME
“சட்டம் படிச்சவங்களே இப்படியா?” பெண் என்றும் பாராமல் நடுரோட்டில் அராஜகம் செய்த தலைமை காவலர்.. பதறவைக்கும் பின்னணி..!!
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் காவல் நிலையத்தில் பணிபுரியும் மீனா என்ற பெண் காவலரை, அதே காவல் நிலையத்தைச் சேர்ந்த பொன்ராஜ் என்ற 40 வயதான ஆண் தலைமை காவலர்சரமாரியாகத் தாக்கிய சம்பவம் காவல்துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு இருவருக்கும் இடையே பணி நிமித்தமாக வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக, கடந்த 9-ஆம் தேதி காவல் நிலைய வளாகத்தில் உள்ள காவலர் குடியிருப்பின் அருகே இருவருக்குள்ளும் மீண்டும் தகராறு வெடித்தபோது, ஆத்திரமடைந்த ஏட்டு பொன்ராஜ் சக பெண் காவலர் என்றும் பாராமல் மீனாவைத் தாக்கியுள்ளார்.
இச்சம்பவம் குறித்துப் பாதிக்கப்பட்ட பெண் காவலர் அளித்த புகாரின் பேரில், கடையநல்லூர் போலீசார் பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து தலைமை காவலர் பொன்ராஜை அதிரடியாகக் கைது செய்து சிறையில் அடைத்தனர். சட்டத்தை நிலைநாட்ட வேண்டிய காவல் துறையைச் சேர்ந்தவரே சக பெண் அதிகாரியிடம் வன்முறையில் ஈடுபட்டதை அடுத்து, தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அசோக்குமார், தலைமை காவலர் பொன்ராஜை உடனடியாகப் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார். இவர்களுக்கிடையேயான இந்த மோதலுக்குத் தனிப்பட்ட விரோதம் காரணமா அல்லது பணிச்சுமையா என்ற கோணத்தில் போலீசார் தற்பொழுது தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்
