CRIME
நடுங்க வைத்த கொடூர விபத்து.. கட்டப்பட்டு வந்த ராட்சத பாலம் அடியோடு சரிந்து விபத்து.. 8 தொழிலாளர்களுக்கு நேர்ந்த விபரீதம்.. நெஞ்சை உலுக்கும் சோக சம்பவம்..!!
பீகார் மாநிலம் வைஷாலி மாவட்டத்தில் பாரத்மாலா பரியோஜனா திட்டத்தின் கீழ் கட்டுமானத்தில் இருந்த நான்கு வழிச்சாலை மேம்பாலத்தின் ஒரு பகுதி திடீரென இடிந்து விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. லால்கஞ்ச் பிளாக்கிற்கு உட்பட்ட ஜலால்பூர் கிராமத்தின் அருகே, கான்கிரீட் ஸ்லாப் மற்றும் கார்டர் லாஞ்சர் மூலம் கட்டுமானப் பொருட்களை ஏற்றும்போது ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இந்த விபத்து நிகழ்ந்ததாகக் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த இடிபாடுகளில் சிக்கி சுமார் 8 தொழிலாளர்கள் படுகாயமடைந்துள்ளனர், அதில் இருவரது நிலைமை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன. காயமடைந்தவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு சர்தார் அரசு மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
பீகாரில் தொடர்ந்து பாலம் இடிந்து விழும் சம்பவங்கள் அரங்கேறி வருவது, அம்மாநிலத்தில் பா.ஜ.க – ஜே.டி.யு கூட்டணியில் உள்ள “இரட்டை எஞ்சின்” அரசை கடுமையான விமர்சனத்திற்கு உள்ளாக்கியுள்ளது. இந்த விபத்து நடந்ததைத் தொடர்ந்து, முறையற்ற கட்டுமானப் பொருட்கள் பயன்படுத்தப்பட்டதே இதற்குக் காரணம் என்றும், முறையான பாதுகாப்புக் தணிக்கைகள் செய்யப்படவில்லை என்றும் எதிர்க்கட்சித் தலைவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இச்சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடத்தப்பட்டு விபத்திற்கான துல்லியமான காரணம் கண்டறியப்படும் என மாவட்ட நிர்வாகமும் காவல்துறையும் தெரிவித்துள்ளனர்.
