LATEST NEWS
“அடப்பாவிங்களா… அமெரிக்கால திருட்டே நடக்காதுன்னு யார் சொன்னா..?!” காரோட 4 சக்கரத்தையும் தூக்கிட்டுப் போன திருடர்கள்… வைரலாகும் இந்திய பெண்ணின் அதிர்ச்சி வீடியோ..!!
அமெரிக்காவில் வசிக்கும் இந்தியப் பெண் ஒருவர், குடியிருப்பு வாகன நிறுத்தத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தனது சகோதரரின் காரின் நான்கு சக்கரங்களும் திருடப்பட்டதைக் கண்டு அதிர்ச்சியடைந்த சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது. இது தொடர்பாக அந்தப் பெண் இன்ஸ்டாகிராமில் வீடியோ வெளியிட்டுள்ளார். “அமெரிக்காவில் திருட்டே நடக்காது என்று யார் கூறியது?” என்ற கேள்வியுடன் தொடங்கும் அந்த வீடியோவில், காரின் சக்கரங்கள் அனைத்தும் கழற்றப்பட்டு, வாகனம் கீழே தாழ்ந்து நிற்பதைக் காட்டியுள்ளார்.
இந்தச் சம்பவத்தின் சுவாரசியமான விஷயம் என்னவென்றால், சக்கரங்களைத் திருடியவர்கள் அல்லது அப்பகுதியினர் அங்கே ஒரு எச்சரிக்கைக் குறிப்பையும் விட்டுச் சென்றுள்ளனர். அதில், “கடந்த வார இறுதியில் கிரிஸ்டல் ஹவுஸ் வளாகத்தில் 3 கார்கள் சேதப்படுத்தப்பட்டன; இந்த வார இறுதியில் 3 கார்களின் சக்கரங்கள் திருடப்பட்டுள்ளன. அடுக்குமாடி குடியிருப்பு நிர்வாகம் வாகன நிறுமிடத்தின் பாதுகாப்பு குறித்து தீவிர நடவடிக்கை எடுக்காத வரை இதைத் தடுக்க முடியாது” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் காட்டுத்தீ போல பரவி, பயனர்களிடையே பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. சிலர் “அமெரிக்காவிலும் இப்படி நடக்குமா?” என அதிர்ச்சி தெரிவித்த நிலையில், மற்ற பயனர்கள் தங்களுக்கும் அமெரிக்காவில் இதுபோன்ற சக்கரங்கள் மற்றும் வாகனப் பொருட்கள் திருடப்பட்ட அனுபவங்கள் உண்டு என்று கருத்து தெரிவித்து வருகின்றனர். மேலும், வாகனங்களின் பாதுகாப்பிற்குச் சிறப்பு பூட்டுகள் மற்றும் சிசிடிவி கேமராக்களைப் பயன்படுத்துமாறு அறிவுறுத்தி வருகின்றனர்.
