LATEST NEWS
இலவு காத்த கிளி போல பதவிக்கு ஆசைப்படுபவன் அல்ல நான்.. அதிமுக – அமமுக இணைப்பு வதந்திகளுக்கு டி.டி.வி. தினகரன் அதிரடி முற்றுப்புள்ளி..!!
அதிமுக மற்றும் அமமுக ஆகிய இரு கட்சிகளும் இணையப் போவதாக ஊடகங்களில் வெளியாகும் செய்திகளில் துளியும் உண்மை இல்லை என்று அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் திட்டவட்டமாக விளக்கமளித்துள்ளார். செய்தியாளர்களைச் சந்தித்த அவர், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் ‘அம்மாவின் ஆட்சி’ தமிழ்நாட்டில் மீண்டும் அமைய வேண்டும் என்ற ஒற்றை நோக்கத்திற்காக, அதிமுகவுக்கு ஒரு உறுதுணையான சக்தியாக மட்டுமே அமமுக பயணித்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். மேலும், தான் இலவு காத்த கிளி போல எந்தவொரு பதவிக்கும் ஆசைப்படுபவன் அல்ல என்றும், பதவிகளைப் பெறுவதற்காக இந்தக் கட்சிகள் இணையப் போவதாக வெளியாகும் தகவல்கள் முற்றிலும் வதந்திகளே என்றும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.
அதிமுக உடனான தற்போதைய அரசியல் உறவு மற்றும் கூட்டணி குறித்துப் பேசிய டி.டி.வி. தினகரன், வரவிருக்கும் இடைத்தேர்தலில் பலப்பரீட்சை நடத்துவது தொடர்பாக அதிமுக தலைமை உடன் ஆலோசிக்க உள்ளதாகக் கூறியுள்ளார். குறிப்பாக, இடைத்தேர்தல் களம் காணும் தொகுதிகளில் இரு கட்சிகளின் சார்பிலும் ஒட்டுமொத்தக் கூட்டணியின் ஆதரவோடு ஒரு ‘பொது வேட்பாளரை’ நிறுத்துவது குறித்து அதிமுக நிர்வாகிகளுடன் விரிவாக விவாதித்து இறுதி முடிவு எடுக்கப்படும் என்றும் அவர் தனது பேட்டியில் தெரிவித்துள்ளார்.
