LATEST NEWS
நிலைமை கைமீறிப் போச்சு..! 36-ல் 19 மருத்துவமனை தான் இயங்குது… WHO கொடுத்த பகீர் தகவல்..!!
காசாவிற்கு உயிர்காக்கும் மருந்துகள் மற்றும் சுகாதாரப் பொருட்களை வழங்குவதில் தொடரும் தாமதங்கள் கடுமையான விளைவுகளுக்கு வழிவகுக்கும் என்று உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது. குளிர்காலம் தொடங்குவதால் அங்குள்ள மனிதாபிமான நெருக்கடி மேலும் மோசமடைய வாய்ப்புள்ளது என்றும், அவசர சிகிச்சைக்குத் தேவையான பொருட்கள் சரியான நேரத்தில் கிடைக்கப்பெறாவிட்டால் நிலைமை மிகவும் மோசமடையும் என்றும் தெரிவிவிக்கப்பட்டுள்ளது.
காசாவின் சுகாதார அமைப்பு கடுமையான நெருக்கடியில் உள்ளது. உலக சுகாதார அமைப்பின் மதிப்பீட்டின்படி, காசாவில் உள்ள 36 மருத்துவமனைகளில் 19 மருத்துவமனைகள் மட்டுமே பகுதியளவு செயல்படுகின்றன; எந்தவொரு மருத்துவமனையும் முழுமையாகச் செயல்படவில்லை என்பது தெரியவந்துள்ளது. மேலும், அத்தியாவசிய மருந்துகள், மருத்துவ உபகரணங்கள் மற்றும் எரிபொருள் ஆகியவற்றிற்குத் தொடர்ச்சியான பற்றாக்குறை நிலவி வருகிறது.
காசாவிற்கான மனிதாபிமான உதவிகளை இஸ்ரேல் தொடர்ந்து தடுத்து வருவதாலும், தீவிரமாகக் கட்டுப்படுத்தி வருவதாலும் மருத்துவப் பொருட்கள் அங்கு வந்து சேர்வதில் பெரும் தாமதம் ஏற்பட்டு வருகிறது. இதனால் காசாவில் சுகாதார சீர்கேடும் பேரழிவும் ஏற்படும் அபாயம் அதிகரித்துள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.
