LATEST NEWS
“அந்த மனசுதான் சார் கடவுள்…!” வீட்டு வேலை செய்த இந்தியப் பெண்… ஒரே நாளில் மாறிய வாழ்க்கை… சீன முதலாளி செய்த மாஸ் சம்பவம்..!!
சீனாவின், ஹாங்காங்கைச் சேர்ந்த பிரபல உள்ளடக்க உருவாக்குநர் அபீர் தபாகியின் வீட்டில் நீண்ட நாட்களாக பணிப்பெண்ணாக மரியம் ஷேக் பணியாற்றி வருகிறார். இந்தியாவைச் சேர்ந்த மரியம், பெற்றோர் இல்லாததால் தனது 5 வயதில் ஒரு குடும்பத்தாரால் தத்தெடுக்கப்பட்டார். அந்த குடும்பம், அவருக்கு அன்பாகவும் ஆதரவாகவும் இல்லை. மாறாக, இவரிடம் உள்ள பணத்தை பறித்துக்கொண்டதுடன், உடல் ரீதியாகவும் அவரை துன்புறுத்தி வந்துள்ளனர். அதோடு, தற்போது இவரது கணவரும் கடும் நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். அவரது மருத்துவச் செலவுகளையும் மரியம் தான் கவனித்து வருகிறார்.
இதனால், கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வந்த மரியமுக்கு பாதுகாப்பான வீடும் இல்லை. இது குறித்து அறிந்த தபாகி மிகுந்த மன வேதனையுற்றார். இதையடுத்து, மரியமுக்கு உதவும் வகையில், அவருக்குச் சொந்த வீடு வாங்கி தரும் நோக்கில் ஆன்லைனில் ‘கோ பண்ட் மீ’ என்ற பிரச்சாரத்தைத் தொடங்கினார். மரியமின் இந்த சோகமான கதையைக் கேட்டு மன வேதனையடைந்த பலரும், அவருக்கு உதவும் வகையில் நிதி உதவியினை செய்தனர்.
இதன் மூலமாக, சுமார் ரூ.47 லட்சம் நிதி திரட்டப்பட்டது. இது மரியம் மற்றும் தபாகி இடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிதியைக்கொண்டு மரியம் வீடு ஒன்று வாங்க உள்ளார். இந்நிலையில், ”எப்போதும் மற்றவர்களுக்காகவே வாழும் மரியமிற்கு, இந்த உலகம் திருப்பி தந்த அன்பு இது” என்று தபாகி நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். இது சம்பந்தமான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றது.
