LATEST NEWS
புகையுமில்லை… தீயுமில்லை… வெறும் குளியல் நீராவியால் ரூ. 1.3 லட்சம் அபராதம்..! ஆஸ்திரேலியாவில் இந்தியப் பெண்ணுக்கு நடந்த விசித்திரம்..! கொதித்தெழும் நெட்டிசன்கள்..!!
ஆஸ்திரேலியாவில் வசிக்கும் இந்தியப் பெண் ஒருவருக்கு, வெறும் 5 நிமிடம் குளித்தபோது உருவான நீராவியால் ஃபயர் அலாரம் ஒலித்ததற்காக ரூ.1.3 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. புகையோ, நெருப்போ இல்லாத நிலையில் நடந்த இந்த சம்பவம், கேட்பதற்கு ஏதோ ஒரு திரைப்படத்தின் விசித்திரமான காட்சி போலத் தோன்றினாலும் இது உண்மையில் நடந்துள்ளது. வெறும் 5 நிமிடம் குளித்தது இவ்வளவு பெரிய பொருளாதார அடியைக் கொடுக்கும் என அந்தப் பெண் கனவில் கூட நினைத்திருக்க மாட்டார்.
வாமிகா என்ற அந்த இந்தியப் பெண், இந்த அதிர்ச்சியூட்டும் சம்பவத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். தனக்கு எளிதில் சளி பிடித்துவிடும் என்பதால், சுடுநீரில் குளிக்கும்போது குளியலறையில் உள்ள எக்ஸாஸ்ட் ஃபேனை அவர் ஆன் செய்யவில்லை என்று கூறியுள்ளார். வெறும் 5 நிமிடம் மட்டுமே அவர் குளித்துள்ளார். ஆனால், அங்கிருந்து வெளியேறிய நீராவி, கட்டிடம் முழுவதும் ஃபயர் அலாரத்தை ஒலிக்கச் செய்துவிட்டது. முதலில் இது சாதாரண ஒத்திகை என அவர் நினைத்த நிலையில், கட்டிட மேலாளர் மற்றும் தீயணைப்பு அவசர சேவைத்துறையினர் அங்கு வந்த பின்னரே விபரீதம் புரிந்தது. அலாரம் குளியலறைக்கு மிக அருகில் இருந்ததால் நீராவியால் ஒலித்துள்ளது. இதற்காக அவருக்கு 1,800 ஆஸ்திரேலிய டாலர்கள் அபராதமாக விதிக்கப்பட்டது.
https://www.instagram.com/reel/DcF94nfxRWj/?utm_source=ig_web_button_share_sheet
இந்த சம்பவம் தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலானதும், சமூக வலைத்தளங்களில் பெரும் விவாதம் கிளம்பியுள்ளது. “ஒரு சாதாரண நீராவியால் ஃபயர் அலாரம் இவ்வளவு எளிதாக ஒலிக்கக் கூடாது; இது அந்த கட்டிடத்தின் அலாரம் சிஸ்டத்தில் உள்ள அதிக சென்சிட்டிவிட்டி அல்லது கோளாறே தவிர, அந்தப் பெண்ணின் தவறு இல்லை” என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். மேலும், முதல் முறை நடக்கும் இத்தகைய எதிர்பாராத தவறுக்கு இவ்வளவு பெரிய தொகையை அபராதமாக விதிப்பதற்குப் பதிலாக, முதலில் எச்சரிக்கை செய்திருக்க வேண்டும் என்றும், அந்த அலாரம் சிஸ்டத்தைத்தான் பரிசோதிக்க வேண்டும் என்றும் நெட்டிசன்கள் அந்தப் பெண்ணுக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகின்றனர்.
