LATEST NEWS
சீமான்+வேல்முருகன்+கிருஷ்ணசாமி கைகோர்ப்பு… திராவிட கட்சிகளுக்கும் தவெக-விற்கும் செக் வைக்க புதிய கூட்டணி..? தமிழக அரசியலில் திடீர் திருப்பம்…!!
தமிழக அரசியல் களத்தில் திமுக, அதிமுக மற்றும் தவெக ஆகிய கட்சிகளுக்கு மாற்றாக புதிய அரசியல் கூட்டணி ஒன்று உருவாகி வருகிறது. நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி மற்றும் தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் ஆகியோர் பல்வேறு கட்சிகள் மற்றும் அமைப்புகளுடன் இணைந்து இந்த புதிய கூட்டணியை அமைத்துள்ளனர். நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் தவெக தலைவர் விஜய் ஏற்படுத்திய மிகப்பெரிய தாக்கத்தால் திராவிடக் கட்சிகள் பின்னுக்குத் தள்ளப்பட்ட நிலையில், மற்ற சிறிய கட்சிகளும் படுதோல்வியைச் சந்தித்தன. இந்த அரசியல் சூழலில்தான், தங்களின் இருப்பைத் தக்கவைத்துக் கொள்ள இந்தத் தலைவர்கள் கைகோர்த்துள்ளனர்.
கடந்த சட்டமன்றத் தேர்தலின் போது அதிமுகவுடன் ஏற்பட்ட கூட்டணி பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததால் கிருஷ்ணசாமி தனித்துப் போட்டியிட்டுத் தோல்வியடைந்தார். அதேபோல, திமுக கூட்டணியில் இருந்த வேல்முருகனும் அதிலிருந்து வெளியேறி தனித்துக் களம் கண்டார். நாம் தமிழர் கட்சி வழக்கம்போல தனித்துப் போட்டியிட்டது. தற்போது இந்த மூன்று முக்கியத் தலைவர்களும் தங்களின் அரசியல் எதிர்காலத்தை நோக்கியும், வரவிருக்கும் சட்டமன்ற இடைத்தேர்தல்களைச் சந்திக்கவும் இந்த புதிய கூட்டு முயற்சியை மேற்கொண்டுள்ளனர்.
திராவிடக் கட்சிகளுக்கு மாற்றாக கடந்த காலங்களில் விஜயகாந்தை முதலமைச்சர் வேட்பாளராக முன்னிறுத்தி உருவாக்கப்பட்ட ‘மக்கள் நலக்கூட்டணி’ பெரும் தோல்வியைத் தழுவியது குறிப்பிடத்தக்கது. இந்தச் சூழலில் சீமான், வேல்முருகன் மற்றும் கிருஷ்ணசாமி ஆகியோரின் இந்த புதிய கூட்டணி தமிழக அரசியலில் ஏதேனும் பெரிய மாற்றத்தை ஏற்படுத்துமா, அல்லது பழைய மக்கள் நலக் கூட்டணியைப் போல மற்றுமொரு தோல்விக் கூட்டணியாக மாறுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
