LATEST NEWS
உஷார்..! வங்கிக் கணக்கு, ஆதார் விவரங்களை ஏ.ஐ. தளங்களில் பதிவிடுகிறீர்களா..? அப்போ அவ்வளவு தான்… பொதுமக்களுக்கு போலீசார் விடுத்த பகீர் எச்சரிக்கை..!!
ஏ.ஐ. தொழில்நுட்ப தளங்களில் பொதுமக்கள் தங்களின் ரகசிய மற்றும் தனிப்பட்ட விவரங்களைப் பகிர்வதைத் தவிர்க்க வேண்டும் என்று திருப்பூர் மாவட்ட காவல்துறை கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளது. தற்போது பள்ளி, கல்லூரி மாணவர்கள் முதல் பெருநிறுவன ஊழியர்கள் வரை பலரும் தங்களின் அன்றாட வேலைகளை எளிதாக்க ஏ.ஐ. செயலிகளைப் பயன்படுத்தி வருகின்றனர். ஆனால், இதில் போதிய விழிப்புணர்வு இல்லாததால், இணையத்தில் நாம் உள்ளீடு செய்யும் தகவல்கள் அனைத்தும் ஏ.ஐ.-ன் தரவுத்தளத்தில் சேமிக்கப்பட்டு, அவை திருடப்படும் பேராபத்து ஒளிந்திருப்பதாகப் போலீசார் சுட்டிக்காட்டியுள்ளனர்.
சைபர் குற்றவாளிகள் இத்தகைய தரவுத்தளங்களில் இருந்து தனிப்பட்ட விவரங்களைத் திருடி, ‘டீப்ஃபேக்’ எனப்படும் போலி உருவகப்படுத்துதல், ஆள்மாறாட்டம் மற்றும் ஆன்லைன் நிதி மோசடிகளுக்குப் பயன்படுத்த வாய்ப்புள்ளது. எனவே, பொதுமக்கள் தங்களின் கடவுச்சொற்கள் , வங்கிக் கணக்கு எண்கள், ஆதார் மற்றும் பேன் கார்டு போன்ற மிக முக்கியமான ரகசிய ஆவண விவரங்களை எக்காரணம் கொண்டும் ஏ.ஐ. தளங்களில் உள்ளீடு செய்யக் கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் உடல்நலக் குறைபாடுகள் மற்றும் மருந்து மாத்திரைகள் தொடர்பான சந்தேகங்களுக்கு ஏ.ஐ. தரும் பதில்கள் பொதுவானவை மட்டுமே என்பதால், தகுதியான மருத்துவ நிபுணர்களை நேரில் அணுகுவதே பாதுகாப்பானது என்றும் விளக்கப்பட்டுள்ளது.
இது குறித்துப் பேசிய திருப்பூர் மாவட்ட போலீஸ் அதிகாரி ஒருவர், ஏ.ஐ. என்பது மனித மூளைக்கு மாற்றான ஒன்றல்ல, அது ஒரு வழிகாட்டும் கருவி மட்டுமே என்று தெளிவுபடுத்தினார். திருமணம், வேலைவாய்ப்பு போன்ற முக்கியமான வாழ்க்கை முடிவுகளுக்கு ஏ.ஐ. தகவல்களை மட்டுமே நம்பி இருக்கக் கூடாது என்றும், தவறான நோக்கங்களுக்காகவோ அல்லது பிறருக்குத் தீங்கு விளைவிக்கும் வகையிலோ இத்தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தினால் சைபர் குற்றப் பிரிவுச் சட்டங்களின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
